இந்தி நடிகர்கள் அமிதாப் பச்சன், அவரது மகன் அபிஷேக் பச்சன் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு செய்யப்பட்டு பரிசோதனை முடிவுகள் வந்துள்ளன.
அமிதாப் பச்சனுக்கு கொரோனா
இந்தி திரையுலக சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து அவர் மும்பையின் நானாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது குடும்பத்தினருக்கும் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து அமிதாப் பச்சன் டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது; “நான் கொரோனா பரிசோதனை செய்தேன். கொரோனா உறுதியானதை தொடர்ந்து மருத்துவமனைக்கு மாற்றப்பட்டேன். அதிகாரிகளுக்கு தகவல் அளித்ததைதொடர்ந்து, என் குடும்பத்தினர் மற்றும் ஊழியர்கள் சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். கடந்த 10 நாட்களில் எனக்கு நெருக்கமாக இருந்த அனைவருமே தயவுசெய்து பரிசோதனை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்”. இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
அபிஷேக் பச்சனுக்கும் கொரோனா
இந்நிலையில், அமிதாப் பச்சனின் மகனும் நடிகருமான அபிஷேக் பச்சனுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவரும் மும்பை நானாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அபிஷேக் பச்சன் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்ததாவது; எனக்கும் என் தந்தைக்கும் கொரோனா உறுதியாகி உள்ளது. நானும் தந்தையும் மும்பை நானாவதி மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறோம். எங்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதனை செய்துகொள்ளும்படி அறிவுறத்தப்பட்டுள்ளனர். ரசிகர்கள் யாரும் பீதியடையாமல் அமைதியாக இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.
நலம் விசாரித்த ரஜினி
இதனிடையே, அபிஷேக் பச்சனின் மனைவியும், பிரபல இந்தி நடிகையுமான ஐஸ்வர்யா ராய், ஜெயா பச்சன் உள்ளிட்ட குடும்பத்தினர் மற்றும் ஊழியர்கள் அனைவரின் ரத்த மாதிரிகளும் கொரோனா சோதனைக்கு உட்பட்டது. இதற்கான ரிசல்ட் சற்றுமுன் வந்த நிலையில், அவர்களுக்கு கொரோனா நெகடிவ் என தெரிந்ததால் குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சன் ஆகியோர் பூரண குணமடைந்து விரைவில் வீடு திரும்ப வேண்டுமென அவர்களது ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர். இதனிடையே அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சன் ஆகியோரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய நடிகர் ரஜினிகாந்த், அவர்களது உடல்நலம் குறித்து விசாரித்துள்ளார். மேலும் அவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் சிகிச்சை முறைகள் குறித்தும் கேட்டறிந்தார்.