மனதில் தைரியமும், உள்ளத்தில் தெளிவும் பிறக்க சிறந்த வழிபாடாக அனுமன் வழிபாடு கருதப்படுகிறது.

ஸ்ரீ அனுமாரு

உலகைக் காக்கும் திருமாலின் அவதாரங்களில் ஒன்றுதான் ஸ்ரீராம அவதாரம். இராமாயணக் காப்பியத்தில் முதன்மை பாத்திரமான ஸ்ரீ ராமனின் நம்பிக்கைக்குரிய பாத்திரங்களில் ஒன்று அனுமன் பாத்திரம். வானரப்படை வீரனான அனுமன் தீவிர இராம பக்தன். ஆஞ்சநேயர், ஹனுமான், மாருதி எனப்பல பெயர்களால் அழைக்கப்படும் ஸ்ரீ அனுமன், அனுமாரு என்று அழைக்கப்படுவதுதான் பெரும்பாலான வழக்காக இருந்து வருகின்றது. இராமாயணம் படித்தவர்கள் சஞ்சீவினி மூலிகை பற்றி அறியாமல் இருக்க வாய்ப்பு இல்லை. ஆயுளைக்காக்கும் இந்த அதிசய மூலிகையைத் தேடி வர புறப்பட்டவர்தான் இந்த அனுமான். புராணங்களின் கூற்றுப்படி, சஞ்சீவினி மூலிகையைத் தேடிக் கண்டுபிடித்து உண்டதால் பல ஆயிரம் ஆண்டுகளாக அனுமன் உயிருடன் வாழ்வதாகக் கருதப்படுகிறது. அதன் அடிப்படையில்தான் ஸ்ரீஅனுமன் இன்றளவிலும் உயிரோடு இருந்து அருள்பாலிப்பதாக நம்பப்படுகிறது.

ஆஞ்சநேரி

புராண காலக் கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டு, உத்தரகாண்ட் மாநில அரசு சில ஆண்டுகளுக்கு முன் 25 கோடி ரூபாய் செலவு செய்து அனுமன் தேடிச்சென்ற சஞ்சீவினி மூலிகையை தேடும் பணியில் ஈடுபட்டது. அத்தேடுதல் பணி சீன எல்லையை ஒட்டிய துரோணகிரி எனும் இடத்தில் நடைபெற்றதாகக் கூறப்படுகிறது. ஆனால் அனுமன் பிறந்ததாகக் கருதப்படும் ஆஞ்சநேரி எனும் இடத்தில் இத்தகைய அரிய மூலிகைகள் நிரம்ப இருப்பதாகக் கூறப்படுகிறது. அங்கே ஸ்ரீ அனுமன் உயிரோடு இருந்தருள்வதாக நம்பப்படுகிறது. அனுமனின தாய் அஞ்சனாதேவி. அதனாலேயே அனுமனை அஞ்சனை மைந்தா என்றும் நாம் அழைக்கின்றோம். தந்தை கேசரீ எனும் வானரத்தலைவர். இவர்களின் குலதெய்வம் பஞ்சபூதங்களில் ஒன்றான வாயு. இவரே அனுமனுக்குத் தந்தையாகவும், குருவாகவும் இருந்து வழி நடத்தினார். அதன்காரணமாகவே அனுமனை இன்றளவும் வாயுபுத்ரன் என்றழைக்கின்றோம்.

சிறிய திருவடி

இராமாயணம் தவிர மகாபாரதம் உள்ளிட்ட சில புராணங்களில் அனுமனைப்பற்றிய குறிப்புகள் உள்ளன. அனுமன் இராமன் மீது கொண்ட அளவற்ற பக்தியால் இராமபக்தனாக, தூதனாக, தொண்டனாகத் திகழ்கிறான். வாழ்நாள் முழுதும் பிரம்மச்சரியம் பூண்டவர். பிற்காலத்தில் இந்தியாவின் வடபகுதிகளிலும் சிவனின் அவதாரமாகவே அனுமனைக் கருதி வழிபடும் மரபு தொடர்ந்து வருகின்றது. வைணவத்தில் திருமாலின் சிறிய திருவடியாக அனுமன் போற்றப்படுகிறார். வைணவத் திருக்கோயில்களில் அனுமனுக்குத் தனிச்சன்னதி உண்டு.

செந்தூரம்

அனுமாரின் முக்கிய அம்சமாகத் திகழ்வது அவரது செந்தூரத் திலகம் ஆகும். ஆரஞ்சு வண்ணத்தில் இருக்கும் அத்திலகத்தைச் செந்தூரத் திலகம் என்று சொல்வர். ஒரு முறை சீதாப்பிராட்டியிடம் ஆசி வாங்கச் சென்ற அனுமார், அங்கே சீதாப்பிராட்டியின் செயலைக்கண்டு அதிசயத்தார். அப்போது சீதாப்பிராட்டி, தன் நெற்றியில் செந்தூரத் திலகம் இட்டுக்கொண்டிருந்தார். அதுகுறித்து சீதாதேவியிடம் வினவினார் அனுமார். அதற்குச் சீதாதேவி, தான் தன் நெற்றியில் செந்தூரம் இடுவது தன்னுடைய ஸ்ரீராமர் நீண்ட ஆயுளுடன் வாழ்வதற்காக வேண்டும் செயல் என்று கூறினார். இதனைக்கேட்ட மாத்திரத்தில் கொஞ்சம்கூட தாமதிக்காமல் அனுமார் செந்தூரத்தை எடுத்து உடல் முழுதும் பூசிக்கொண்டார். அந்நிலையில் அனுமன் எத்துனைச்சிறந்த ராமபக்தன் என்பதை உலகமறிந்தது.

வழிபாடு

அனுமனை அனுதினமும் வழிபடுவோருக்கு, இம்மையிலும் மறுமையிலும் துன்பங்கள் இல்லை. அவனுக்குப் பிடித்த ஸ்ரீராம நாமத்தை உள்ளத்தால் உச்சரித்து, நெற்றியில் செந்தூரம் இட்டு வழிபட்டால், தைரியமும் வெற்றியும் மனதில் சிறக்கும். அனுமனைத் தொடர்ந்து வழிபடுவோரின் உள்ளம் எப்போதும் தெளிவோடு இருக்கும். தினந்தோறும் அனுமாரை வழிபடுவோருக்கு சகல செளபாக்கியங்களும் கிடைக்கும். அவ்வாறு தினந்தோறும் வழிபட முடியாவிட்டாலும், ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமைகளில் கட்டாயம் வழிபட வேண்டும். அது அடியார்களுடைய வாழ்வில் நற்பலன்களை அள்ளித்தரும். ஸ்ரீராம பக்தனான அனுமன் வழிபாட்டில் ஈடுபடுவோர், ஸ்ரீராம நாமத்தை உச்சரிப்பதுதான் முதன்மையான வழிபாடாகும். வாகன விபத்துக்களில் இருந்து தப்பிக்கவும், துர்மரணங்கள் நடக்காது இருக்கவும் அனுமனை தினமும் வழிபடலாம். ஸ்ரீராம நாமத்தை உள்ளத்தில் எழுதிக்கொள்வதுபோல, பக்தர்கள் தங்கள் வாகனங்களிலும், இல்லங்களிலும், தொழில் கூடங்களிலும் எழுதிக்கொண்டு வழிபட்டால், அவர்தம் வாழ்வில் வெற்றியும், அமைதியும் தங்கும். நாள்தோறும் இருக்கும் இடம்தோறும் அனுமனை மனதில் ஜபிப்பவர்களுக்குக் காலமெல்லாம் வெற்றியே. சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயருக்கு செந்தூரத்திலகம் இட்டுவந்தால், துயரங்கள் பறந்து போகும். செவ்வாய்க்கிழமைகளில் அனுமனுக்குத் துளசி மாலை சாற்றி, சுண்டல், வெல்லம், கொய்யாப்பழம், லட்டு போன்றவற்றைப் நைவேத்தியமாகப் படைத்து வழிபட்டால் அனுமனின் இதயத்தில் நீங்கா இடமும், ஸ்ரீராமனின் திருவருளும் எந்நாளும் கிட்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here