கரண் ஜோகர் விஜய் தேவரகொண்டாவை வைத்து புதிய படம் ஒன்றை இயக்க போவதாக சொல்லப்பட்டு வந்த நிலையில், அந்தப் படத்தில் இருந்து விஜய் தேவரகொண்டா விலகி உள்ளார்.

ரசிகர்கள் கொண்டாடும் நடிகர்

அர்ஜுன் ரெட்டி என்ற மிகப்பெரிய வெற்றி படத்தின் மூலம் இந்தியா முழுவதும் மிகவும் பிரபலமான நடிகராக அறியப்பட்டவர் விஜய் தேவரகொண்டா. தெலுங்கில் பல படங்களில் நடித்து வந்த விஜய் தேவரகொண்டா, தமிழில் நோட்டா, டியர் காம்ரேட் போன்ற படங்களில் நடித்தார். தெலுங்கு திரையுலகில் வளர்ந்து வரும் முன்னணி நடிகராக உள்ள விஜய் தேவரகொண்டாவை, தமிழ் மட்டுமல்லாமல் இந்திய அளவில் பல வேற்றுமொழி ரசிகர்களும் கொண்டாடி வருகின்றனர்.

வெற்றி நாயகன்

நுவ்விலா, லைஃப் இஸ் பியூட்டிஃபுல் மற்றும் எவடே சுப்ரமணியம் போன்ற திரைப்படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்துக் கொண்டிருந்த விஜய் தேவரகொண்டா, பெல்லி சூப்புளு என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். அதன்பிறகு அவர் நடித்த அர்ஜுன் ரெட்டி திரைப்படம் வெளியாகி தெலுங்கு திரை உலகையே திரும்பிப் பார்க்க வைத்தது. ரிலீஸான அனைத்து திரையரங்குகளிலும் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று கொண்டாடப்பட்ட இந்த திரைப்படம், வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய சாதனை படைத்து உலகெங்கிலும் பிரபலமானது. அதனைதொடர்ந்து 2019ஆம் ஆண்டு வெளியான டியர் காம்ரேட் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸ் ஹிட் அடித்து, விஜய் தேவரகொண்டாவை மீண்டும் ஒருமுறை இந்திய அளவில் பிரபலம் அடையச் செய்தது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என ஒரே சமயத்தில் 4 மொழிகளில் இந்தப் படம் வெளியாகி சக்கைப்போடு போட்டது.

நடிக்க மறுப்பு

இதனிடையே, ரூ. 40 கோடி பட்ஜெட்டில் விஜய் தேவரகொண்டாவை வைத்து கரன் ஜோகர் திரைப்படம் ஒன்றை தயாரிப்பதாக இருந்த நிலையில், தற்போது அந்தப் படத்திலிருந்து விஜய் தேவர்கொண்டா விலகியுள்ளார். அதற்கான காரணம் குறித்து விஜய் தேவரகொண்டா கூறியதாவது; நடித்த கதாபாத்திரங்களில் திரும்பத் திரும்ப நடிக்க விருப்பமில்லை. அதை எனது ரசிகர்களும் விரும்ப மாட்டார்கள். நான் ஹிந்தி திரைப்படங்களில் நடிக்க மிகவும் ஆர்வத்துடன் இருக்கிறேன். ஆனால் ஒரே மாதிரி கதைகளில் இல்லாமல், புதுமையான கதைகளில் தெலுங்கு மற்றும் ஹிந்தியில் நடிக்க காத்துக்கொண்டிருக்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here