கொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து மக்களை காக்கவும், தொற்றை தடுக்கவும் வீடுகளுக்கே சென்று பரிசோதனை செய்ய வேண்டுமென நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார்.

பதற்றத்தில் வாழும் மக்கள்

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; தமிழகத்தில் கொரோனாவின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில் மருத்துவர்களை சந்திக்க முடியாமல் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கொரோனா தொற்றின் அறிகுறிகள் இருக்கும் பலர், மருத்துவரைப் பார்க்க முடியாமல் தங்களுக்கு தொற்று உள்ளதா, இல்லையா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள முடியாமல், பதற்றத்தில் வாழும் நிலை ஏற்பட்டுள்ளதை அரசு கவனிக்க வேண்டும்.

முனைப்புடன் செயல்பட வேண்டும்

“பரவலான பரிசோதனை” என்பதை தொடக்கத்தில் இருந்தே மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தி வந்திருக்கிறது. அதை செய்யாததால் தான் சென்னையில் மட்டுமே கொரோனா இருப்பது போன்ற பிம்பம் கட்டமைக்கப்பட்டு, அதிலிருந்து தப்பிவிடும் நோக்கத்தில் மக்கள் குடும்பம் குடும்பமாக சென்னையிலிருந்து வெளியேறியது ஜூன் மாதம் முழுவதும் நடந்தது. தமிழகத்தில் 95 ஆய்வகங்களில் சராசரியாக ஒரு நாளைக்கு 35 ஆயிரம் நபர்களுக்கு பரிசோதனை செய்யப்படுகிறது என அரசின் அறிக்கை தெரிவிக்கிறது. இருந்தாலும், மாநிலம் முழுவதும் பரவியிருக்கும் நோய் கிருமியின் தாக்கத்தில் இருந்து மக்களை காக்க அரசு இன்னும் முனைப்புடன் செயல்பட வேண்டும்.

வலியுறுத்தல்

கொரோனா தொற்று அறிகுறிகள் இருப்பவர்கள், மருத்துவரின் அனுமதிச் சீட்டுக்காக காத்திருக்காமல், நேரடியாக ஆய்வகங்களை பரிசோதனைக்காக அணுகலாம் என அறிவிக்க வேண்டும். அனைத்து ஆய்வகங்களிலும், பரிசோதனை உபகரணங்கள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். தொற்றில் முதலிடத்தில் இருந்த மஹாராஷ்டிரா மாநிலம் மும்பை நகரில் இதுபோன்ற ஒரு நடவடிக்கையை செயல்பாட்டுக்கு வந்துள்ளது. மேலும் ஆய்வக ஊழியர்கள் தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் வீட்டிற்கே சென்று ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டும். இதனால் தொற்று பரவும் அபாயம் தவிர்க்கப்படும். டெல்லியை போல் பரிசோதனைகளின் விலையை இன்னும் குறைக்க வேண்டும். இவ்வாறு கமல்ஹாசன் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here