தமிழகத்தில் ஆன்லைன் வழிக்கல்வி இல்லை எனவும் டிவி மூலமே பாடம் கற்பிக்கப்படும் என்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
பள்ளிகள் மூடல்
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் 25ம் தேதி முதல் மே 31ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. பின்னர் ஜூன் 1ம் தேதி முதல் ஒருசில தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் இருந்தது. சென்னையில் கொரோனா பரவல் அதிகமான காரணத்தால் ஜூன் 19ம் தேதி முதல் 30ம் தேதி வரை மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தற்போது சில தளர்வுகளுடன் ஜூலை 31ம் தேதி வரை ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் மூடப்பட்ட பள்ளிகள் அனைத்தும் திறக்கப்படாமலும், எப்போது திறக்கப்படும் என தெரியாமலும் உள்ளது. எனவே தனியார் பள்ளிகள் ஆன்லைன் மூலம் மாணவர்களுக்கு வகுப்பு நடத்தத் தொடங்கிவிட்டன.
ஆன்லைன் வகுப்பல்ல
அந்த வகையில், அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் ஆன்லைன் வகுப்புகளை தொடங்க அரசு திட்டமிட்டு உள்ளதாகவும் இதற்கான திட்டத்தை வரும் 13ம் தேதி முதலமைச்சர் தொடங்கி வைக்க இருப்பதாகவும் நேற்று செய்திகள் வெளியாகின. இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், ஆன்லைன் வழி கல்வி இல்லை எனவும் டிவி மூலம் பாடம் கற்பிக்க திட்டம் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆன்லைன் வகுப்புகள் என்று சொன்னது கல்வி தொலைக்காட்சி சேனல் வழியாக நடத்தப்படுவதாகும் என கூறி உள்ளார். ஒவ்வொரு தொலைக்காட்சிக்கும் தினமும் குறிப்பிட்ட நேரங்கள் ஒதுக்கப்பட்டு, சில வகுப்புகளுக்கான பாடங்கள் அதன்மூலம் ஒளிபரப்ப திட்டமிட்டு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
பிளஸ் 2 தேர்வு
பிளஸ்-2 வில் எஞ்சிய ஒரு தேர்வை எழுதாத மாணவர்களை தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க முடியாது எனக் கூறிய செங்கோட்டையன், 718 மாணவர்கள் தேர்வு எழுத விருப்பம் தெரிவித்துள்ளதாகவும், விண்ணப்பிக்காத 34,812 மாணவர்கள் தேர்வு எழுத விருப்பம் தெரிவித்தால் எழுதலாம் என்றும் தெரிவித்தார்.