டிக் டாக் செயலியை மீண்டும் கொண்டு வராவிட்டால் தற்கொலை செய்துகொள்வேன் எனக் கூறி டிக் டாக் புகழ் ஜிபி முத்து வீடியோ வெளியிட்டுள்ளார்.
டிக் டாக்
இந்தியாவில் டிக் டாக் வலையில் விழாதவர்களை பெரும் ஆச்சரியத்தோடுதான் பார்க்க முடிகிறது. தங்களையும், தங்களது பல்வேறு திறமைகளையும் வெளிப்படுத்த டிக் டாக் செயலி, பயனர்கள் எளிமையாக பயன்படுத்தும் வகையில் உள்ளது. இருப்பினும் அதன் மேல் உள்ள அதிகப்படியான மோகத்தால் சர்ச்சை மற்றும் குற்ற நடவடிக்கையில் பலபேர் சிக்கிக்கொள்வதையும் நம்மால் பார்க்க முடிகிறது. பல மாநிலங்களில் பணியில் இருக்கும் அரசு அதிகாரிகள் டிக் டாக் செயலியை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது. இதுமட்டுமின்றி நாள்தோறும் டிக் டாக் செயலியால் பல்வேறு விபத்துகளும், குற்ற சம்பவங்களும் நிகழ்ந்த வண்ணம் உள்ளன. முக்கியமாக பெண்கள் இதனால் அதிகளவு பாதிக்கப்படுகிறார்கள். தவறான வீடியோக்கள், ஆபாசமான வீடியோக்கள் என டிக் டாக் செயலியில் இடம்பெறாத விஷயமே இல்லை என்று சொல்லலாம்.
மத்திய அரசு தடை
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை டிக் டாக் பயன்படுத்தாத ஆளே இல்லை எனக் கூறலாம். குறிப்பாக லாக்டவுன் காலத்தில் டிக் டாக்கின் பயன்பாடு பெருமளவு அதிகரித்தது. சாமானிய மக்கள் மட்டுமின்றி திரைப்பிரபலங்கள் பலரும் டிக் டாக் செயலியை பயன்படுத்தி வந்தனர். இந்த நிலையில், டிக் டாக், யூசி பிரவுசர், வி-சாட், யூ-கேம், ஹலோ, ஷேர் இட் உள்ளிட்ட 59 சீன செயலிகளுக்கு மத்திய அரசு அதிரடியாக தடை விதித்தது. இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாடு, இந்தியாவின் பாதுகாப்பு, அரசின் மற்றும் மக்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக விளங்கியதால், இந்த 59 செயலிகளுக்கு தடை விதிக்கப்படுவதாக மத்திய அரசு தெரிவித்திருந்தது.
தற்கொலை செய்துகொள்வேன்!
இந்த நிலையில், டிக் டாக் புகழ் ஜிபி முத்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், எல்லைப் பிரச்சனை, கொரோனா உள்ளிட்ட பல பிரச்சனைகள் இருந்தாலும் தன்னுடைய பிரச்சனையையும் பிரதமர் மோடி பரிசீலிக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் டிக் டாக் செயலிக்கு அனுமதி அளிக்காவிட்டால் தற்கொலை செய்து கொள்வேன் எனவும் ஜிபி முத்து அதிர்ச்சி தகவலை கூறியுள்ளார். சில தினங்களுக்கு முன் வீடியோ வெளியிட்ட ஜிபி முத்து, டிக் டாக் செயலி மீதான தடையை நீக்க வேண்டுமென கேட்டுக்கொண்டது குறிப்பிடத்தக்கது.