சென்னையில் இன்று முதல் ஊரடங்கு கட்டுப்பாடுகளுடன் தளர்த்தப்பட்டுள்ளதால் ஆட்டோ, டாக்சிகள் வழக்கம் போல் இயங்கத் தொடங்கின.

 

ஊரடங்கு

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் கடந்த மார்ச் மாதம் 25ம் தேதி முதல் ஜூன் 30ம் தேதி வரை 5 கட்டங்களாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தற்போது ஜூலை 31ம் தேதி வரை தளர்வுகளுடன் 6ம் கட்ட ஊரடங்கு அமலில் உள்ளது. ஏற்கனவே சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் ஜூன் 19ம் தேதி முதல் 30ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

கட்டுப்பாடுடன் தளர்வு

இந்நிலையில், சென்னைக்கு மட்டும் இன்று முதல் தனியாக சில தளர்வுகளும், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களுக்கு தனியாக சில தளர்வுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி சென்னையில் 50 சதவீத தொழிலாளர்களுடன் ஐ.டி. நிறுவனங்கள் இயங்கலாம். அவர்களுக்கு அந்நிறுவனங்களே வாகன வசதி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். அனைத்து தனியார் நிறுவனங்கள், தொழிற்சாலைகள், ஏற்றுமதி – இறக்குமதி நிறுவனங்கள் 50 சதவீதம் ஊழியர்களுடன் இயங்கலாம். வணிக வளாகங்களை தவிர்த்து அனைத்து வகையான ஷோரூம்கள், ஜவுளி மற்றும் நகைக் கடைகள் 50 சதவீத தொழிலாளர்களுடன் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்படலாம்.

இயல்பு நிலை!

ஓட்டல்கள் மற்றும் ரெஸ்டாரண்டுகள் காலை 6 மணி முதல் 9 மணி வரை உணவுகளை பார்சல் வழங்கலாம். ஆன்லைன் ஆர்டர்கள் வீடுகளுக்கு கொண்டு கொடுக்கும் சேவையை இரவு 9 மணி வரை மேற்கொள்ளலாம். காய்கறி மற்றும் மளிகை கடைகள் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்படலாம். டாக்சிகளில் ஓட்டுனர் தவிர்த்து 3 நபர்களும், ஆட்டோக்களில் ஓட்டுனர் தவிர்த்து 2 பேரும் பயணிக்கலாம். சைக்கிள் ரிக்‌ஷாக்களும் அனுமதிக்கப்படுகிறது. அடுத்த உத்தரவு வரும் வரை கோவில்கள் திறக்கப்படாது எனவும் மதம் சார்ந்த கூட்டங்களுக்கும் தடை விதிக்கப்படுவதாகவும் தமிழக அரசின் உத்தரவில் கூறப்பட்டுள்ளது. சென்னைக்கு கட்டுப்பாடுடன் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால், வீட்டிலேயே முடங்கியிருந்த மக்கள், இன்று மீண்டும் பணிக்கு திரும்பினர். ஆட்டோ, டாக்ஸிகளும் ஓடத் தொடங்கியதால் சென்னை மாநகரம் மெல்ல மெல்ல மீண்டும் பழைய நிலைக்கு திரும்புகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here