வட தமிழகம் மற்றும் புதுச்சேரியின் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மழைக்கு வாய்ப்பு
இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு வட தமிழகம் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது. அதேபோல், அடுத்த 48 மணி நேரத்திற்கு வடகடலோர மாவட்டங்கள் மற்றும் மேற்குதொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் கூறியுள்ளது.
மீனவர்களுக்கு அறிவுரை
சென்னையைப் பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் எனவும் ஆய்வு மையம் கூறியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் ஏற்காடு, வால்பாறை, சின்கோனா(கோவை) ஆகிய பகுதிகளில் தலா 5 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. மத்திய வங்கக்கடல், தென்கிழக்கு அரபிக்கடல், லட்சத்தீவு, கேரளா, கர்நாடகா கடற்பகுதிகள், தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் மேற்கண்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.