சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், இந்தி நடிகர் ஷாருக்கான், கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் ஆகியோருடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தும் அதனை நிராகரித்துள்ளார் விஜே பெப்சி உமா.
பெப்சி உமா பேசுறேன்…
Hi.. நா தான் உங்க பெப்சி உமா பேசுறேன்..என்ற குரல்… யாராலும் மறந்து விட முடியாது. தமிழ்த் தொலைக்காட்சிகளின் முதல் நட்சத்திர தொகுப்பாளினி அவர்தான். அந்த நிகழ்ச்சியின்போது அதில் அவர் உடுத்தி வரும் புடவைகளை பார்ப்பதற்கு பெண்களும், அவரது சிரிப்புக்கு ஆண்களும் காத்துக் கிடந்தார்கள். அப்படி ஒரு கிரேஸ் அந்தக் காலத்தில் உமா மீது இருந்தது. 90’ஸ் கிட்ஸ்களுக்கென்றே ஆசிர்வதிக்கப்பட்ட விஷயங்கள் பல இருக்கின்றன. அதைத்தான் அவ்வவ்போது சமூக வலைத்தளங்களில் அவர்கள் பகிர்ந்து வருகிறார்கள். அதனைப் போலவே ஆசிர்வதிக்கப்பட்ட ஒரு விஷயம்தான் சன் டிவி தொகுப்பாளினி பெப்சி உமா. சன் டிவி பார்வையாளர்களுக்கு மட்டுமே தெரியும், வியாழக்கிழமை இரவு எவ்வளவு அரிதான ஒன்றென்று. எத்தனை முயற்சிகள், “கீப் ட்ரை, கீப் ஆன் ட்ரை..” என்ற வார்த்தையை உச்சரிப்பது, தனித்துவம் வாய்ந்த அவரது சிரிப்பு என பெப்சி உமா மிகவும் ஸ்பெஷலாகத் தான் இருந்தார்.
உமா பெப்சி உமா ஆன கதை
1990’ல் தொலைபேசி என்பதே அபூர்வமான ஒரு விஷயம்தான். அப்படிப்பட்ட நேரத்திலும் அனைவராலும் விரும்பப்பட்ட பிரபலம் பெப்சி உமா. இவருக்கு ஏன் இந்தப்பெயர் வந்திருக்கும் என்கிற யோசனை எல்லாருக்கும் உண்டு. அவர் நடத்திய நிகழ்ச்சியின் விளம்பரதாரர் பெப்ஸி நிறுவனத்தினர். நிகழ்ச்சிக்கு பெயர் பெப்சி உங்கள் சாய்ஸ். அதனால் தான் அப்படி ஒரு அடைமொழிக்கு சொந்தக்காரர் ஆகி இருக்கிறார் உமா. இவரது தமிழும், குரல்வளமும் சிறு குழந்தைகளுக்கும் பிடிக்கும். அப்போதைய சினிமா நடிகைகளை விட அழகில் சிறந்தவராக பெப்சி உமா இருந்ததும் ஒரு காரணம். சிறு வயது தொகுப்பாளினிதான் என்ற போதும் மாடர்ன் உடைகளை அவர் அணிந்ததில்லை. புடவைகள்தான் இவரது சாய்ஸ். பாந்தமான தோற்றத்தில் அழகான புடவைகளில் தெளிவான உச்சரிப்பில் அனைவரையும் கவர்ந்தவர் பெப்சி உமா. தற்போதுள்ள தொகுப்பாளினிகள் எவருமே உமாவின் இடத்தை இன்றுவரை பிடிக்க முடியவில்லை. இவரது குரலைக் கேட்பதற்காகவே பல வாரங்கள் காத்துக்கிடக்கும் இளைஞர் பட்டாளமே இருந்தது. ஏன் இவர் அழகில் மயங்காத பெண்கள் இருப்பார்களா என்பது சந்தேகம் தான்.
கட் அவுட் நாயகி
தொகுப்பாளினிக்கு முதன்முதலாக கட்-அவுட் வைக்கப்பட்டது இவருக்குத் தான். அந்தக் காலக்கட்டங்களில் குஷ்புக்கு இணையாக இவருக்கும் ரசிகர்கள் இருந்தார்கள். கேரளாவில் ஒரு தமிழ் தொகுப்பாளினிக்காக கோயில் கட்டப்பட்டது என்றால் அது பெப்சி உமாவிற்காக மட்டும்தான். ஒரு நிகழ்ச்சியை அதிக வருடங்கள் தொகுத்து வழங்கிய பெண்ணும் பெப்சி உமாதான். தொடர்ந்து 15 வருடங்கள் இந்த நிகழ்ச்சியை அவர் நடத்தினார். ஜெயா டிவியில் ஆல்பம் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய பெப்சி உமா, அதில் திரைப்பட நடிகர், நடிகைகளையும், முன்னணி பிரமுகர்களையும், அவர்களின் வாழ்க்கைக் கதைகளை அவர்களின் நேர்காணல் மூலம் மக்களுக்கு நிறைய சுவாரசியமான கதைகளை தெரியப்படுத்தினார்.
வாய்ப்புகள் நிராகரிப்பு
இப்போதைய காலகட்டத்திலும் பெப்சி உமாவை நடிக்க வைப்பதற்கு ஏராளமானோர் முயற்சி செய்து வருகின்றனர். ஆனால் அவர் இதுவரை யாரிடமும் சிக்கவில்லை. இந்நிலையில் வெகுகாலத்திற்குப் பிறகு பெப்சி உமா பற்றிய சுவாரஸ்ய தகவல் ஒன்று கிடைத்துள்ளது. ஒரு பேட்டியில் மனம் திறந்த பெப்சி உமா, “சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவரது படத்தில் நடிப்பதற்கு கேட்டதாகவும், ஆனால் நான் சம்மதிக்கவில்லை என்றும் கூறியுள்ளார். அதேபோன்று பிரபல ஹிந்தி நடிகர் ஷாருக்கான் அவரது படத்தில் நடிப்பதற்கு அரைமணி நேரமாக தன்னுடன் பேசியதாகவும், ஆனாலும் தான் சம்மதம் தெரிவிக்கவில்லை எனவும் கூறியுள்ளார். சச்சின் டெண்டுல்கருடன் நடிக்கும் ஒரு விளம்பரப் படத்தில் தனக்கு கொடுக்கப்பட்ட உடையை அணிய விருப்பமில்லாததால் அவருடன் நடிக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். புகழுக்காக சில பல விஷயங்களை விட்டுக் கொடுத்துப் போகிறவர்களுக்கு மத்தியில், கொள்கைக்காக வாய்ப்பை உதறித் தள்ளிய பெப்ஸி உமா நம்மை புருவம் உயர்த்த வைக்கிறார்.