சரியான நேரத்தில் கொண்டு வரப்பட்ட ஊரடங்கால் லட்சக்கணக்கான உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

ஊரடங்கு

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு முழுவதும் மார்ச் 25ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. பின்னர் படிப்படியாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. ஒவ்வொரு முறை ஊரடங்கு நீட்டிக்கும்போதும் பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சி மூலம் உரையாற்றி வந்தார். 5ம் கட்ட ஊரடங்கின் போது சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. அந்த அறிவிப்புகள் இன்றுடன் நிறைவடைய உள்ள நிலையில், 2ம் கட்ட தளர்வுகள் நாளை முதல் அமலுக்கு வருகிறது. இதனிடையே பிரதமர் மோடி இன்று நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.

பிரதமர் பேச்சு

அப்போது பேசிய அவர், பொதுமுடக்கத்தின் 2ம் கட்ட தளர்வு தொடங்கிவிட்டதாக தெரிவித்தார். கொரோனாவை எதிர்த்து போராடும் சூழலில் பருவ மழைக்காலம் தொடங்கிவிட்டதால், இந்த காலத்தில் காய்ச்சல், சளி உள்ளிட்டவை வரும் என்பதால் மக்கள் மிகவும் கவனமுடன் இருக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். பொது முடக்கத்தை பல இடங்களில் மக்கள் சரியாக பின்பற்றவில்லை என வேதனை தெரிவித்த அவர், இப்போது செய்யக்கூடிய சிறிய தவறுகள் மிகப்பெரிய விலையைக் கொடுக்க நேரிடலாம் என எச்சரித்தார். சரியான நேரத்தில் கொண்டுவரப்பட்ட முழு முடக்கத்தால் லட்சக்கணக்கான உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளதாகவும், பிற நாடுகளுடம் ஒப்பிடும்போது இந்தியா கொரோனாவை சிறப்பாக எதிர்கொண்டதாகவும் மோடி பெருமிதத்துடன் கூறினார்.

பசியால் வாடக்கூடாது

கொரோனா விதிமீறலுக்காக ஒரு நாட்டின் பிரதமருக்கு கூட அபராதம் விதிக்கப்பட்டதை பார்த்தோம் என சுட்டிக்காட்டிய நரேந்திர மோடி, பிரதமர் முதல் சாமானியர் வரை நமது நாட்டிலும் ஒரே விதிதான் எனத் தெரிவித்தார். சட்டத்தைவிட யாரும் உயர்ந்தவர்கள் இல்லை என்றும் அரசின் விதிமுறைகளை மீறுவோர் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் எனவும் மோடி கூறினார். நாட்டில் ஏழை மக்கள் யாரும் பசியால் வாடக்கூடாது எனக் குறிப்பிட்ட பிரதமர், இதற்காக மத்திய அரசு உரிய நேரத்தில் நடவடிக்கை எடுத்துள்ளது என்றார். விவசாயிகளுக்கு 18 ஆயிரம் கோடி ரூபாயும், 80 கோடி மக்களுக்கு இலவச ரேசன் பொருள்கள் வழங்கும் திட்டம் மேலும் 5 மாதங்களுக்கு நீட்டிக்கப்படும் என்றும் மோடி கூறினார். அரிசி அல்லது கோதுமையுடன் ஒரு கிலோ பருப்பும் இலவசமாக வழங்கப்படும் எனவும் அவர் அறிவித்தார். இதற்காக 90 ஆயிரம் கோடி ரூபாய் கூடுதலாக செலவாகும் எனவும் அதேசமயம் நாட்டின் பொருளாதார சூழலை மேம்படுத்த தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பிரதமர் நரேந்திர மோடி அப்போது உறுதியளித்தார்.  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here