சினிமா பின்புலம் உள்ளவர்களை குறைகூறக்கூடாது எனவும் சொந்த முயற்சினாலேயே நாங்கள் முன்னேறி வருகிறோம் எனவும் நடிகை கீர்த்தி சுரேஷ் தெரிவித்துள்ளார்.
வலுக்கும் நெபாட்டிசம் சர்ச்சை
பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் திரைத்துறையில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது. சினிமா பின்புலம் உள்ளவர்கள் அவரது சினிமா வாய்ப்பை தட்டிப்பறித்ததால் மன உளைச்சல் ஏற்பட்டு, மன அழுத்தத்தால் சுஷாந்த் தற்கொலை செய்து கொண்டார் என்று பெருமளவில் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இந்த குற்றச்சாட்டுகளுக்கு இன்னும் முடிவு எட்டப்படாத நிலையில், சினிமா பின்புலம் உள்ளவர்களைப் பற்றி பலரும் பலவகையான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர். இதற்கு பல நடிகர், நடிகைகளும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அதில் நடிகை கீர்த்தி சுரேஷும் இணைந்துள்ளார்.
நீண்ட விளக்கம்
இதுதொடர்பாக கீர்த்தி சுரேஷ் கூறுகையில்; சினிமாவில் நடிக்கும் ஆசை அனைவருக்கும் இருக்கும். சினிமா பின்புலம் உள்ளவர்கள், இல்லாதவர்கள் என அனைவரும் அதில் அடங்குவர். ஆனால் யாராக இருந்தாலும் திறமை இருந்தால் மட்டுமே சினிமாவில் ஜெயிக்க முடியுமே தவிர, சினிமா பின்புலம் அவர்களை தாங்கிப்பிடிப்பது என்பது மிகவும் தவறான கருத்தாகும். வாரிசு நடிகர்களாக இருந்தாலும் அவர்கள் திறமையாக நடித்தால் மட்டுமே மக்கள் மனதில் இடம்பெற முடியும். சினிமா பின்புலம் இல்லாதவர்கள் சினிமாவில் நடிக்க எந்த அளவுக்கு ஆர்வம் காட்டுகிறார்களோ, அதே அளவிற்கு சினிமா பின்புலம் இருக்கும் நாங்களும் ஆர்வம் காட்டுவதில் என்ன தவறு இருக்கிறது. எனக்கு பெற்றோர்களால் தான் சினிமா வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அடுத்தடுத்த வாய்ப்புகள் அனைத்தும் என் நடிப்பை பார்த்தும், திறமையை பார்த்தும் வந்தது. திறமை இருந்தால் மட்டுமே சினிமாத்துறையில் நீடித்து நிற்க முடியும். சினிமா பின்புலம் ஜெயிக்காது, திறமை மட்டுமே ஜெயிக்கும். இவ்வாறு கீர்த்தி சுரேஷ் கூறியுள்ளார்.
ரசிகர்களின் மனக்குமுறல்
தனது கருத்துக்களை கீர்த்தி சுரேஷ் தெளிவாக விளக்கியுள்ள நிலையில், சுஷாந்தின் மரணத்திற்கு இன்னும் கண்டன ஒலி தொடர்ந்துகொண்டேதான் இருக்கிறது. சுஷாந்த் விவகாரத்தில் சில சினிமா பின்புலம் உள்ள பாலிவுட் பிரபலங்களின் மீது வழக்கும் போடப்பட்டுள்ளது. சுஷாந்தின் மரணம் ஏற்பட்டு இரண்டு வாரங்கள் ஆன பிறகும் அவர்களின் ரசிகர்கள் மனதில் இன்னும் அவர் நீங்காத இடம் பிடித்து இருக்கிறார். சுஷாந்தின் பல வீடியோக்களையும், பல புகைப்படங்களையும் அவர்கள் தனது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். வெற்றி – தோல்வி என்பது பற்றி கவலைப்படாமல், நமது உழைப்பில் கவனம் செலுத்தி வந்தால் நிச்சயம் ஜொலிக்க முடியும் என பலரும் கருத்து கூறியுள்ளனர்.