விஜய்யுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவருடன் பேசுவது இல்லை, அவருடைய படங்களையும் பார்ப்பதில்லை என்று சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகர் நெப்போலியன் கூறியது பெரும் சர்ச்சையாகியுள்ளது.
மூத்த நடிகர்
தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருப்பவர் நடிகர் நெப்போலியன். அரசியலுக்கு சென்ற பின் சிறிது காலம் திரைப்படங்களில் நடிக்காமல் இருந்த அவர், சீமராஜா திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு தந்தையாக நடித்தார். இந்த நிலையில், சமீபத்தில் ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்த நெப்போலியன் பல்வேறு சுவாரஸ்மான விஷயங்களைப் பகிர்ந்து கொண்டார்.
மனஸ்தாபம்
இதுதொடர்பாக நெப்போலியன் பேசுகையில்; போக்கிரி படத்தில் பிரபுதேவாவிற்காக தான் நடித்தேன். அந்த படத்தில் நடிக்கும் போது விஜய் கூட ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவருடன் பேசுவதில்லை. என் நெருங்கிய நண்பர்கள் சிலர் விஜய்யின் தீவிர ரசிகர்களாக இருந்தார்கள். போக்கிரி படத்தில் விஜய்யுடன் நடிக்கும் நேரத்தில் எனது நண்பர்கள் விஜய்யை சந்திக்க முடியுமா என கேட்டனர். விஜயை பாக்கனும் அவ்ளோ தானே.. வாங்க போலாம். பாக்குறது மட்டும் இல்ல, போட்டோவும் எடுத்துக்கலாம் என்று போக்கிரி படப்பிடிப்பு தளத்திற்கு அழைத்து சென்றேன். அதன்பிறகு தான் பெரிய கூத்தே நடந்தது. எனக்கும் விஜய்க்கும் ஏற்பட்ட மனக்கசப்பிற்கு காரணமாக அமைந்தது. திரைத்துறையில் என் தம்பி என்ற உரிமையில், அன்றைய தினம் எந்தவித அனுமதியும் பெறாமல் என்னுடைய நண்பர்களை சந்திக்க வைக்க வேண்டி விஜய்யின் கேரவேன் கதவை திறந்தேன். கேரவேன் கதவருகே அமர்ந்திருந்த விஜய்யின் பாதுகாவலர் என்னை தடுத்துவிட்டார். உங்களை பத்தி எதுவும் சொல்லவில்லை, கொஞ்சம் வெயிட் பண்ணுங்க சார் கிட்ட கேட்டுட்டு வந்துடுறேன் என்று கூறினார். சிறிய மனஸ்தாபத்தில் பாதுகாவலருடன் வாக்குவாதத்தில் ஈடுபடவே படப்பிடிப்பு தளம் கலவரமாகியது.
புகழாரம்
வெளியில் சத்தம் வருவதை உணர்ந்த நடிகர் விஜய் கேரவேனுக்கு வெளியே வந்து என்னை பார்த்து… சார்… உங்களுக்கு கொஞ்சம்கூட மேனர்ஸ் இல்லையா..? என்று முகத்தில் அடித்தது போல கோபமாக பேசிவிட்டார். அதுவும் என் நண்பர்கள் முன்னிலையிலேயே திட்டியதால் நான் கடும் மனவருத்தத்திற்கு ஆளாகிவிட்டேன். இது தான் எனக்கும், விஜய்க்கும் கருத்து வேறுபாடு ஏற்பட காரணமாகி விட்டது. அதன்பிறகு அவரது படம் எது வெளியானாலும் பார்ப்பதில்லை. தெலுங்கில், மகேஷ் பாபு பண்ணிய ரோலை விஜய் பண்ணியிருந்தார். இப்போதும் நல்ல கடினமாக உழைக்கிறார். அதனால்தான் அவருக்கு இப்படியான வளர்ச்சி சாத்தியமாகியுள்ளது. இவ்வாறு நெப்போலியன் தனது பேட்டியில் கூறியுள்ளார்.
நியாயப்படுத்த முடியாது
வயதில் மூத்தவர், பெரிய நடிகர், மத்திய அமைச்சராக பதவி வகித்தவர் நெப்போலியன். அந்த உரிமையில் நடிகர் விஜய்யிடம் அனுமதி கேட்காமல் அல்லது விஜய்யை தம்பி போல நினைத்துக்கூட ஒருவித உரிமையான உணர்வில் நெப்போலியன் அப்படி சந்திக்க முயற்சி செய்திருக்கலாம். விஜய் மீதும் பெரியதவறு ஏதும் இல்லை. படப்பிடிப்பு தளத்தில் இருக்கும் டென்ஷன், சோர்வு எல்லாம் அந்த தளத்தில் இருப்பவர்களுக்கு தான் தெரியும். அப்படியான நேரத்தில் விஜய் இப்படி மோசமாக பேசியிருக்கலாம். இருந்தாலும், இதில் யாருடைய செயலையும் நியாயப்படுத்த முடியாது. யாராக இருந்தாலும், ஒரு அளவுக்கு மேல் அவர்கள் மீது உரிமை எடுத்துக்கொள்ளக் கூடாது என்பதையும், என்ன டென்ஷனாக இருந்தாலும், சோர்வாக இருந்தாலும் மற்றவர்களிடம் பேசும் போது நிதானத்தை இழந்துவிடக் கூடாது என்பதையும் இந்த சம்பவம் நமக்கு எடுத்துக்காட்டுகிறது.