தூத்துக்குடி மாவட்டம் சாத்தன்குளத்தில் உயிரிழந்த ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்சின் குடும்பத்தினரை நடிகர் ரஜினிகாந்த் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆறுதல் தெரிவித்துள்ளார்.
தந்தை, மகன் மரணம்
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் செல்போன் கடை நடத்தி வந்தவர் பென்னிக்ஸ். கடந்த 20-ம் தேதி ஊரடங்கு விதிகளை மீறி கடையை திறந்து வைத்ததாக கூறி அவரையும் அவரது தந்தை ஜெயராஜையும் போலீசார் காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். பின்னர் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்த போலீசார், அவர்களை கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைத்துள்ளனர். இதற்கிடையே, கிளைச் சிறையில் விசாரணைக் கைதியாக இருந்த பென்னிக்ஸுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சிறைக் காவலர்கள் அவரை கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். மகன் பென்னிக்ஸ் உயிரிழந்த நிலையில், தந்தை ஜெயராஜூம் மரணம் அடைந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கி உள்ளது. ஊரடங்கு விதிகளை மீறி கடையை திறந்து வைத்தாக கூறி போலீசார் வழக்கு பதிவு செய்து, அடித்துக் கொன்றதாக உறவினர்கள் மற்றும் ஊர் மக்கள் குற்றம்சாட்டி உள்ளனர். இந்த உயிரிழந்த விவகாரத்தில் சம்மந்தப்பட்ட 2 எஸ்.ஐ.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
நீதிபதிகள் விசாரணை
இந்த விவகாரம் தொடர்பாக தாமாக முன்வந்து விசாரணை நடத்திய சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை, கோவில்பட்டி முதலாவது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு பாரதிதாசன், சாத்தான்குளத்தில் தங்கியிருந்து சாட்சிகளிடமும், கோவில்பட்டி சிறையிலும் நேரடியாக விசாரணை நடத்த அதிரடி உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து கோவில்பட்டி முதலாவது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு பாரதிதாசன், தூத்துக்குடி தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு ஹேமா ஆகியோர் நேற்று காலை கோவில்பட்டி கிளைச் சிறைக்கு சென்று விசாரணை நடத்தினர். அங்கு பணியில் இருந்த சிறை வார்டன் சங்கர் மற்றும் ஜெயராஜ்-பென்னிக்ஸ் உயிரிழந்த தினத்தில் பணியில் இருந்த சிறை காவலர்கள் ஆகியோரிடமும் தனித்தனியாக விசாரிக்கப்பட்டது. மேலும் சிறையில் இருந்த ஆவணங்களையும், கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளையும் பார்வையிட்டு நீதிபதிகள் ஆய்வு செய்தனர். அதனைத்தொடர்ந்து இன்று காலை சாத்தான்குளம் காவல் நிலையத்தில் மாவட்ட குற்றவியல் நீதிபதி ஹேமா, கோவில்பட்டி மாஜிஸ்திரேட் பாரதிதாசன் ஆகியோர் நேரில் சென்று விசாரணை நடத்தினர். ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோர் கைதானது முதல் உயிரிழந்தது வரை காவல்நிலையத்தில் என்ன நடந்து என போலீசாரிடம் விசாரித்து ஆவணங்களையும் சரிபார்த்தனர்.
ரஜினி ஆறுதல்
தந்தை, மகன் உயிரிழந்த சம்பவத்திற்கு அரசியல் கட்சியினர், திரையுலகினர் உட்பட பலர் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இயக்குநர்கள் சேரன், பா. ரஞ்சித், கார்த்திக் சுப்புராஜ், நடிகர்கள் கமல்ஹாசன், விஜய், சூர்யா, ஜெயம்ரவி, பால சரவணன், நடிகைகள் குஷ்பு உள்ளிட்டோர் டுவிட்டரில் தங்களது கண்டனங்களை பதிவு செய்தனர். அந்த வகையில், விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டு மரணமடைந்த ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸின் குடும்பத்தினரை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு நடிகர் ரஜினிகாந்த் ஆறுதல் தெரிவித்துள்ளார்.
ஜெயராஜின் மனைவி, மகளை தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டு ரஜினிகாந்த் ஆறுதல் கூறியதாக கராத்தே தியாகராஜன் தெரிவித்துள்ளார்.