சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகும் ‘அயலான்’ படத்தின் ஷூட்டிங்கிற்கு ரகுல் ப்ரீத் சிங் வர மறுப்பதாக பரவிய வதந்திக்கு அவர் பதிலடி கொடுத்துள்ளார்.

முன்னணி நடிகை

நடிகை ரகுல் ப்ரீத் சிங் கில்லி என்ற கன்னட படத்தின் மூலம் சினிமா துறைக்கு அறிமுகமானார். தனது நடிப்பை மக்கள் ஏற்றுக்கொண்ட நிலையில், தெலுங்கிலும், தமிழிலும் நடிக்க துவங்கினார். அவர் நடித்த அனைத்துப் படங்களும் கைகொடுக்க, பாலிவுட்டில் கால் பதித்தார். இப்போது தமிழ், தெலுங்கு, ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் டாப் நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டு இருக்கிறார். கொரோனா பாதிப்பு காரணமாக நடிகர்கள் அனைவரும் உதவி வந்த நிலையில், நடிகைகள் யாரும் உதவவில்லையே என்ற பேச்சு பரவலாக இருந்து வருகிறது. ஆனால், அமைதியாக தனது வீட்டின் அருகில் இருக்கும் குடிசைவாழ் மக்களுக்கு அன்றாடம் தேவையான மளிகை பொருட்களை வாங்கி கொடுத்து வந்துள்ளார் ரகுல் ப்ரீத் சிங்.

‘அயலான்’

தற்போது தன் கைவசம் பல படங்களை வைத்திருக்கும் ரகுல் ப்ரீத் சிங், சிவகார்த்திகேயனுடன் அயலான் படத்தில் நடிக்கவும் ஒப்பந்தமாகி இருக்கிறார். ‘இன்று நேற்று நாளை’ படத்தை இயக்கிய ரவிகுமார் இயக்கம் இப்படத்தில், இஷா கோபிகர், கருணாகரன், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்யும் ‘அயலான்’ படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். நீண்ட தாமதத்திற்கு பிறகு கடந்த பிப்ரவரி மாதம் அயலான் படத்தின் படப்பிடிப்பு துவங்கிய நிலையில், அந்த ஷுட்டிங்கில் ரகுல் ப்ரீத் சிங் மார்ச் மாதம் கலந்து கொண்டார். இது வேற்று கிரக வாசிகளை பற்றிய படம் என்பதால், ரகுல் ப்ரீத் ஒரு வானியல் ஆராய்ச்சியாளர் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார் என்று கூறப்படுகிறது. ஷுட்டிங் நடந்து கொண்டிருந்த நேரத்தில் கொரோனா முழு ஊரடங்கு போடப்பட்டதால் படப்பிடிப்பும் ரத்து செய்யப்பட்டது. தற்போது படப்பிடிப்பு இல்லையென்றாலும், மறுபுறம் இந்தப் படத்துக்கான கிராஃபிக்ஸ் பணிகளும் தொடங்கப்பட்டுள்ளது. முழுக்க ஏலியான்களை முன்வைத்து உருவாக்கப்பட்டுள்ள கதை என்பதால், கிராபிக்ஸ் பணிகள் மட்டும் சுமார் 8 மாதம் நடைபெறவுள்ளதாகத் தெரிகிறது.

கடும் கோபம்

இந்நிலையில், இப்படத்தின் ஷுட்டிங்கை மீண்டும் துவங்க உள்ளதாகவும், அதில் ரகுல் பிரீத் நடிக்க மறுக்கிறார் என்றும் செய்திகள் பரவியது. ஆரம்பத்தில் நடிக்க ஒப்புக்கொண்ட ரகுல், கொரோனா வைரஸை காரணம் காட்டி ஷுட்டிங் வர மறுக்கிறார் என்றும், அதனால் அவருக்கு பதில் வேறு நடிகையை படக்குழு நடிக்க வைக்க முடிவு எடுத்துள்ளதாகவும் கூறப்பட்டது. இந்த தகவலை அறிந்த நடிகை ரகுல் ப்ரீத் சிங் கடும் கோபம் அடைந்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில்; “சில மீடியாக்கள் எப்போது உண்மைகளையும், சரியான தகவலையும் மக்களுக்கு கொண்டு போகும் என்று தெரியவில்லை. எந்த ஒரு செய்தியையும் கூடுதலாக, அதுவும் இப்படியா பரபரப்பை ஏற்படுத்துவது. தயவுசெய்து யார் எங்கே, எப்போது படப்பிடிப்பை ஆரம்பிக்கிறார்கள் என்று சொல்லுங்கள். வேலை செய்ய துடித்துக் கொண்டிருக்கிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.

வதந்திக்கு விளக்கம்

‘அயலான்’ பட இயக்குனர் ரவிகுமார் கூறுகையில்; “நான் பணிபுரிந்த கலைஞர்களில் மிகவும் தொழில்முறையாக இருப்பவர் ரகுல் ப்ரீத் சிங். இப்படியான வதந்திகளை வெளியிடுவது துரதிர்ஷ்டவசமானது. ஒரு குழுவாக நாங்கள் முழு மனநிலையுடன் இருக்கிறோம். இந்த படத்தில் ரகுல் ப்ரீத் சிங் கண்டிப்பாக நடிப்பார். இயல்புநிலை திரும்பியபின் அவருடனான எங்களது வேலையை ஆரம்பிக்கக் காத்திருக்கிறோம்,” எனக் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here