இயக்குநர் விக்னேஷ் சிவன் நடிகை நயன்தாராவுடன் மருத்துவமனைக்கு சென்று கொரோனா பரிசோதனை மேற்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

அச்சுறுத்தும் கொரோனா

சீனாவின் வுகான் நகரில் உருவான கொரோனா வைரஸ் தற்போது உலகத்தையே அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4 லட்சத்தை தாண்டியுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 2,27,756 பேர் குணமடைந்துள்ளனர். வைரஸ் தொற்றால் பலியானவர்கள் எண்ணிக்கை 13 ஆயிரத்து 254 ஆக உயர்ந்துள்ளது. இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. தமிழகத்திலும் கொரோனா பாதிப்பு அதிகமாகவே உள்ளது. குறிப்பாக சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் கொரோனாவின் பாதிப்பு அதிகரித்து காணப்படுகிறது. இதனை கட்டுப்படுத்தும் வகையில், சென்னை , திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

வதந்தி, விளக்கம்

சென்னையில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்று திரைப்பிரபலங்களையும் விட்டுவைக்கவில்லை. பழம்பெரும் பின்னணி பாடகர் ஏ.எல்.ராகவன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். அவர் மனைவி எம்.என். ராஜமும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். அதற்காக அவர் சிகிச்சை பெற்று வருகிறார். தெலுங்கு பட நடிகரும், தயாரிப்பாளருமான பண்ட்லா கணேஷூம் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். சமீபத்தில் நடிகை நயன்தாரா, இயக்குநர்கள் விக்னேஷ் சிவன், மிஷ்கின் ஆகியோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதாகவும், தங்களைத் தாங்களே தனிமைப்படுத்திக் கொண்டதாகவும் சமூக வலைத்தளங்களில் செய்தி வெளியானது. இதனால் தமிழ்த் திரையுலகம் பரபரப்புக்கு உள்ளானது.

கொரோனா சிகிச்சை?

ஆனால், இதனை திட்டவட்டமாக மறுத்த இயக்குநர் விக்னேஷ் சிவன், தன்னைப்பற்றியும், நயன்தாராவைப் பற்றியும் வெளியான செய்தியில் உண்மையில்லை எனக் கூறினார். நயன்தாரா ஆரோக்கியமாக இருப்பதாக கூறிய அவர், இருவரும் சேர்ந்து டிக் டாக்கில் குழந்தை முகத்தை வைத்து ரைமிங் பாடலுக்கு வீடியோ போட்டு நலமாக இருக்கிறோம் என்பதை வெளிப்படுத்தினர். இந்த நிலையில், சில தினங்களுக்கு முன்பு நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் மருத்துவமனைக்குச் சென்று கொரோனா பரிசோதனை மேற்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. தங்களுக்கு எந்த உடல்நலக் குறைவும் ஏற்படவில்லை எனக் கூறிய விக்னேஷ் சிவன், எதற்காக நயன்தாராவை அழைத்துக்கொண்டு மருத்துவமனைக்கு போனார் என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here