போலீஸ் கெட் அப்பில் அதிரவைத்த லேடி சூப்பர் ஸ்டார் விஜயசாந்தி இன்று தனது பிறந்த நாளை கொண்டாடும் நிலையில், அவருக்கு திரையுலகினரும் ரசிகர்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
கம்பீரமான போலீஸ் தோற்றம்
போலீஸ் படங்களில் பொதுவாக ஹீரோக்கள் மட்டுமே மாஸ் காட்டி வந்த வேளையில், யாரும் எதிர் பார்க்காதவாறு பெண் போலீசாக வந்து ஹீரோக்களுக்கு இணையாக அனைவரையும் தனது ஆக்ஷன் மூலம் மிரட்டியவர்தான் நடிகை விஜயசாந்தி. விஜயசாந்தி என்ற பெயரைக் கேட்டவுடனே நமக்குள் முதலில் தோன்றுவது அந்த கம்பீரமான போலீஸ் தோற்றம். அவ்வாறு பல கதாபாத்திரங்களில் நம்மை ரசிக்க வைத்த விஜயசாந்திக்கு இன்று பிறந்தநாள். இவர் இன்று தனது 54வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இந்நிலையில் விஜயசாந்திக்கு குடும்பத்தினரும், ரசிகர்களும், திரைத்துறையில் இருந்து பலரும் வாழ்த்துக்களைச் சொல்லி வருகின்றனர்.
‘கல்லுக்குள் ஈரம்’
1980 மற்றும் 90களில் தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து இன்றுவரை கிட்டத்தட்ட 180 படங்களுக்கு மேல் நடித்துள்ளார் விஜயசாந்தி. தெலுங்கு மற்றும் தமிழ் என இரு மொழிகளிலும் கொடிகட்டிப் பறந்து வந்த அவர், இயக்குனர் பாரதிராஜா உடன் இணைந்து நடித்த ‘கல்லுக்குள் ஈரம்’ என்ற படத்தின் மூலம் தமிழ் திரைக்குள் அறிமுகமானார். விஜயசாந்தி அறிமுகமான சில காலங்களிலேயே அனைத்து முன்னணி நடிகர்களுடனும் இணைந்து நடித்து தனக்கென ஒரு தனிச் சிறப்பை பெற்று வெற்றியுடன் வலம் வந்தார். பொதுவாக போலீஸ் அதிகாரி என்றால் பெரும்பாலும் நமக்கு நினைவில் வருவது மாஸ் காட்டும் கதாநாயகர்களாக தான் இருக்க முடியும். ஆனால் முதன்முதலாக இவர் ‘கர்தவ்யம்’ என்ற தெலுங்குப் படத்தில் போலீஸ் அதிகாரியாக வந்து ஆக்ஷனில் மிரட்டியிருப்பார். இந்த படம் தெலுங்கு திரைத்துறையில் மிகப்பெரிய வெற்றி அடைந்து, வசூலை அள்ளி குவித்தது. இந்தப் படம் தமிழிலும் ‘வைஜெயந்தி ஐபிஎஸ்’ என்ற பெயரில் டப் செய்து வெளியிடப்பட்டு, இங்கும் மிகப்பெரிய வெற்றியடைந்து பாக்ஸ் ஆபிஸில் கலக்கியது.
பல விருதுகள்
ஆக்சனில் கலக்கிய ‘வைஜெயந்தி ஐபிஎஸ்’ படத்திற்காக விஜயசாந்தி சிறந்த நடிகைக்கான தேசிய விருதும் பெற்றிருக்கிறார். மேலும் இந்த படத்தின் கதை கிரண்பேடி ஐபிஎஸின் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவங்களை முன்மாதிரியாக கொண்டு உருவாக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. திரைப்படத்துறையில் கதாநாயகர்களுக்கு இணையாக பல சாதனைகளை செய்து வந்த இவர், சிறந்த நடிகைக்காக கலைமாமணி விருது, தமிழ்நாடு அரசு விருது மற்றும் ஏழு முறை பிலிம்பேர் விருதுகளையும், ஆறுமுறை வாழ்நாள் சாதனையாளர் விருதையும் பெற்றுள்ளார். இவ்வாறு பல படங்களில் கொடிகட்டிப் பறந்த வந்த இவருக்கு, அப்போது ரசிகர்கள் அனைவரும் லேடி சூப்பர் ஸ்டார் என்றும் லேடி அமிதாப் என்றும் பல அடைமொழி பெயர்களை வைத்து கூப்பிட்டு, அவரை ரசித்து வந்தனர். இன்றும் அவருக்கு பல ரசிகர்கள் இருக்கின்றனர் என்று சொன்னால் அது மிகையாகாது.
கோடி ரூபாய் சம்பளம்
1980 மற்றும் 90களில் கொடிகட்டி பறந்த விஜயசாந்தி, தெலுங்கு சினிமாவில் மிகப்பெரிய முன்னணி நடிகையாக வலம் வந்தவர். ‘கர்தவ்யம்’ என்ற மாபெரும் வெற்றிப் படத்திற்காக முதன்முதலில் ஒரு கோடி ரூபாய் சம்பளம் பெற்ற முதல் நடிகை என்ற பெருமையும் இவரை மட்டுமே சேரும். இவ்வாறு மன்னன், மெக்கானிக் மாப்பிள்ளை, போலீஸ் லாக்கப், வைஜெயந்தி ஐபிஎஸ், ராஜஸ்தான் போன்ற பல தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து 90களில் தென்னிந்திய சினிமாவின் மகாராணியாக வலம் வந்தார் விஜயசாந்தி. 28 ஆண்டுகள் சினிமாவில் நடித்த நிலையில், 1998-ம் ஆண்டு அரசியலிலும் அதிரடி என்ட்ரி கொடுத்தார். சென்னையில் வசித்து வந்தவர், அரசியல் பயணத்துக்காக ஹைதராபாத்துக்கு குடியேறினார். 2006-ம் ஆண்டு `நாயுடம்மா’ என்ற படத்துக்குப் பிறகு இதுவரை நடிக்காமல் இருந்தார் விஜயசாந்தி. அரசியலில் வெற்றி தோல்விகளைச் சந்தித்தவர். சில காலம் படங்களில் நடிக்காமல் இருந்த விஜயசாந்தி, தெலுங்கில் மகேஷ்பாபு நடித்த ‘சரிலேரு நீகேவ்வாரு’ என்ற படத்தின் மூலம் மீண்டும் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார்.
பிறந்த நாள்
தனது சூப்பர் ஹிட் படங்களின் மூலம் நம்முள் நீங்கா இடம் பிடித்திருக்கும் லேடி சூப்பர் ஸ்டார் விஜயசாந்திக்கு இன்று பிறந்தநாள். இவர் தனது பிறந்தநாளை வெகுவிமர்சையாக மகிழ்ச்சியுடன் கொண்டாடினார். இவருக்கு திரைப்பட ரசிகர்கள், நண்பர்கள், திரைத்துறை நண்பர்கள் என பலரும் வாழ்த்துக்களை சொல்லி, வாழ்த்து மழையில் நனைய வைத்து வருகின்றனர்.