மக்கள் மனதில் என்றென்றும் நீங்கா இடம்பிடித்த வி.ஜே. பெப்ஸி உமா மீண்டும் சின்னத்திரைக்கு வருவாரா? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

பெப்சி உமா பேசுறேன்…

Hi.. நா தான் உங்க பெப்சி உமா பேசுறேன்..என்ற குரல்… யாராலும் மறந்து விட முடியாது. தமிழ்த் தொலைக்காட்சிகளின் முதல் நட்சத்திர தொகுப்பாளினி அவர்தான். அந்த நிகழ்ச்சியின்போது அதில் அவர் உடுத்தி வரும் புடவைகளை பார்ப்பதற்கு பெண்களும், அவரது சிரிப்புக்கு ஆண்களும் காத்துக் கிடந்தார்கள். அப்படி ஒரு கிரேஸ் அந்தக் காலத்தில் உமா மீது இருந்தது. 90’ஸ் கிட்ஸ்களுக்கென்றே ஆசிர்வதிக்கப்பட்ட விஷயங்கள் பல இருக்கின்றன. அதைத்தான் அவ்வவ்போது சமூக வலைத்தளங்களில் அவர்கள் பகிர்ந்து வருகிறார்கள். அதனைப் போலவே ஆசிர்வதிக்கப்பட்ட ஒரு விஷயம்தான் சன் டிவி தொகுப்பாளினி பெப்ஸி உமா. சன்டிவி பார்வையாளர்களுக்கு மட்டுமே தெரியும், வியாழக்கிழமை இரவு எவ்வளவு அரிதான ஒன்றென்று. எத்தனை முயற்சிகள், “கீப் ட்ரை, கீப் ஆன் ட்ரை..” என்ற வார்த்தையை உச்சரிப்பது, தனித்துவம் வாய்ந்த அவரது சிரிப்பு என பெப்ஸி உமா மிகவும் ஸ்பெஷலாக தான் இருந்தார்.

உமா எப்படி பெப்சி உமா ஆனார்

1990’ல் தொலைபேசி என்பதே அபூர்வமான ஒரு விஷயம்தான். அப்படிப்பட்ட நேரத்திலும் அனைவராலும் விரும்பப்பட்ட பிரபலம் பெப்ஸி உமா. இவருக்கு ஏன் இந்தப்பெயர் வந்திருக்கும் என்கிற யோசனை எல்லாருக்கும் உண்டு. அவர் நடத்திய நிகழ்ச்சியின் விளம்பரதாரர் பெப்ஸி நிறுவனத்தினர். நிகழ்ச்சிக்கு பெயர் பெப்ஸி உங்கள் சாய்ஸ். அதனால் தான் அப்படி ஒரு அடைமொழிக்கு சொந்தக்காரர் ஆகி இருக்கிறார் உமா. இவரது தமிழும், குரல்வளமும் சிறு குழந்தைகளுக்கும் பிடிக்கும். அப்போதைய சினிமா நடிகைகளை விட அழகில் சிறந்தவராக பெப்ஸி உமா இருந்ததும் ஒரு காரணம். சிறு வயது தொகுப்பாளினிதான் என்ற போதும் மாடர்ன் உடைகளை அவர் அணிந்ததில்லை. புடவைகள் தான் இவரது சாய்ஸ். பாந்தமான தோற்றத்தில் அழகான புடவைகளில் தெளிவான உச்சரிப்பில் அனைவரையும் கவர்ந்தவர் பெப்ஸி உமா. தற்போதுள்ள தொகுப்பாளினிகள் எவருமே உமாவின் இடத்தை இன்று வரை பிடிக்க முடியவில்லை. இவரது குரலைக் கேட்பதற்காகவே பல வாரங்கள் காத்துக் கிடக்கும் இளைஞர் பட்டாளமே இருந்தது. ஏன் இவர் அழகில் மயங்காத பெண்கள் இருப்பார்களா என்பது சந்தேகம் தான்.

கட் அவுட் நாயகி

தொகுப்பாளினிக்கு முதன்முதலாக கட்-அவுட் வைக்கப்பட்டது இவருக்கு தான். அந்தக் காலக்கட்டங்களில் குஷ்புக்கு இணையாக இவருக்கு ரசிகர்கள் இருந்தார்கள். கேரளாவில் ஒரு தமிழ் தொகுப்பாளினிக்காக கோயில் கட்டப்பட்டது என்றால் அது பெப்ஸி உமாவிற்காக மட்டும்தான். ஒரு நிகழ்ச்சியை அதிக வருடங்கள் தொகுத்து வழங்கிய பெண்ணும் பெப்ஸி உமாதான். தொடர்ந்து 15 வருடங்கள் இந்த நிகழ்ச்சியை அவர் நடத்தினார். ஜெயா டிவியில் ஆல்பம் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய பெப்ஸி உமா, அதில் திரைப்பட நடிகர் நடிகைகளையும் முன்னணி பிரமுகர்களையும் அவர்களின் வாழ்க்கைக் கதைகளை அவர்களின் நேர்காணல் மூலம் மக்களுக்கு நிறைய சுவாரசியமான கதைகளை தெரியப்படுத்தினார்.

நெகிழ வைத்த சம்பவம்

குழந்தைகளுக்கும் பிடித்தமான பெப்ஸி உமாவையே மனம் நெகிழ வைக்கும் சம்பவம் ஒன்று நடந்தது. ஆட்டிச பாதிப்பு கொண்ட ஒரு சிறுவனுக்கு பெப்ஸி உமா என்றால் கொள்ளைப் பிரியமாம். பேசக்கூட முடியாத அந்த சிறுவனின் வாயில் இருந்து வரும் ஒரே வார்த்தை உமா தானாம். இதனை அறிந்து அந்த சிறுவனை நேரில் சென்று சந்தித்திருக்கிறார் உமா. அப்போது அந்த சிறுவன் உமாவின் பெயரை எழுதிக் காட்டி அவரை நெகிழ வைத்துள்ளார். ப்ளஸ் டூ படிக்கும் போதே தூர்தர்ஷனில் ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்க ஆரம்பித்துவிட்டார் பெப்ஸி உமா. இதுதான் அவரது வி.ஜே. வாழ்க்கையின் முதல் படி. இவரின் முதல் தொலைக்காட்சி நிகழ்ச்சி தூர்தர்ஷனில் ஒளிபரப்பான ‘வாருங்கள் வாழ்த்துவோம்’ என்ற நிகழ்ச்சிதான். அதில் 104 ஷோக்களை தொகுத்து வழங்கியுள்ளார். இதன் மூலமாக தான் சன்டிவியில் வாய்ப்பு கிடைத்து, பெப்ஸி உங்கள் சாய்ஸ் நிகழ்ச்சி தொகுத்து வழங்க ஆரம்பித்தார்.

ரஜினி, கமலை உதறிய உமா

இப்போதைய தொகுப்பாளினிகள் சினிமா வாய்ப்புகளுக்காக காத்துக் கொண்டிருக்க, ரஜினி, கமல், மணிரத்னம், பாரதிராஜா என பல தமிழ் சினிமா ஜாம்பவான்கள் வாய்ப்பளித்து அழைத்த போதிலும், ஆர்வம் இல்லை, சினிமாவில் நடிக்கும் அளவிற்கு பொறுமை இல்லை. நான் ஒரு சோம்பேறி எனக்கூறி வாய்ப்பை உதறிவிட்டார் உமா. இவர் சன்டிவியில் இருந்து வெளியேறி சிறிது கால இடைவேளைக்கு பிறகு, ஜெயா டிவியில் ஆல்பம் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்க துவங்கினார். அந்த நேரத்தில், ஜெயா டிவியின் நிகழ்ச்சி தயாரிப்பாளர் ஒருவர் இவரை வார்த்தைகளாலும், செய்கைகளாலும் தொந்தரவு செய்தார் எனக்கூறி அவர் மீது புகார் கொடுத்தார் உமா. இதனால், அவர் கைதும் செய்யப்பட்டார்.

அன்பால் சேர்ந்த கூட்டம்

இதுகுறித்து பெப்ஸி உமா கூறுகையில்; சென்னையில் 1974 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 18 ஆம் தேதி பிறந்தேன். அப்பா வக்கீல், அம்மா நடன கலைஞர் மற்றும் ஓவியர். என் தாய் தந்தையின் ஆசைப்பட்டபடி நான் எம்பிஏ படித்து முடித்து விட்டேன். உங்கள் சாய்ஸ் நிகழ்ச்சிக்கு அப்படி ஒரு ரசிகர்கள் கிடைப்பார்கள் என்று எதிர்பார்க்கவில்லை. அன்பால் திரண்ட கூட்டம் அது. முதன் முதலாக டிவி நிகழ்ச்சி தொகுப்பாளருக்கு கட் அவுட் வைத்தார்கள் என்றார் அது எனக்காகத்தான் இருக்கும். புகழோடு இருந்தபோது என்னைச் சுற்றி வந்த கூட்டம் நான் மீடியாத்துறையை விட்டு விலகிய உடன் என்னை விட்டு ஓடிப்போனது. இப்போது நான் மீண்டும் புகழ் வெளிச்சத்திற்கு வந்த உடன் என்னைத் தேடி வந்து ஓட்டுகிறது. நான் எதைப் பற்றியும் கவலைப்படாமல் ஒரு புன்னகையோடு நிறுத்திக் கொள்கிறேன்.

தொந்தரவு

அரசியல் ரீதியான தொந்தரவு, அழுத்தம் காரணமாகவே மீடியாவை உலகை விட்டு விலக நேரிட்டது. எலிக்காய்ச்சல், சிக்குன் குனியா இரண்டும் சேர்ந்து 6 மாதம் படுத்த படுக்கையாக மாற்றியது. அதிலிருந்து இப்போது மீண்டு வந்திருக்கிறேன். ஜெயா டிவியில் ஆல்பம் நிகழ்ச்சியில் சிவகுமார் தொடங்கி பிரபு, பத்மா சுப்ரமணியம் வரை நிறைய பேரை பேட்டி எடுத்திருக்கிறேன். பத்திரிக்கையாளர் சோ மற்றும் முதல்வர் ஜெயலலிதா ஆகியோரின் ஆல்பத்தை புரட்டி பார்க்க வேண்டும் என்று நம்பிக்கையோடு முடித்தார் உமா.

சின்னத்திரை மறு பிரவேசம்

தற்போது பெப்சி உமா ஏற்றுமதி-இறக்குமதி மற்றும் கட்டிடத்துறை தொடர்பான ஒரு சர்வதேச நிறுவனத்தின் தமிழ்நாட்டு பிரிவிற்கு அதிகாரியாக இருக்கிறார். பல்வேறு சேனல்களில் அவரை மீண்டும் நிகழ்ச்சி நடத்த அழைத்தபோது மறுத்துவிட்டார். சும்மா அரட்டை அடிக்கும் நிகழ்ச்சியில் தோன்ற விருப்பமில்லை என்றும் கூறிவிட்டார். ரசிகர்களின் மனதை குளிரவைத்த பெப்ஸி உமாவுக்கு, எப்போது மக்கள் மனதில் ஒரு இடம் உண்டு.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here