மேற்குவங்க மாநிலத்தில் சீன அதிபருக்கு பதிலாக வடகொரிய அதிபரின் உருவ பொம்மையை எரித்து பாஜகவினர் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
அத்துமீறும் சீனா
லடாக் எல்லையான கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் கடந்த 15ம் தேதி இந்திய – சீன வீரர்களுக்கு இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். சீனா தரப்பில் 43 பேர் வரை உயிரிழந்திருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த மோதலால் இரு நாடுகளுக்கும் இடையே போர் மூளும் சூழ்நிலை நிலவி வருவதால், அதனை எதிர்கொள்ளும் அளவிற்கு படைகள் தயார்படுத்தப்பட்டன. மேலும் இந்த விவகாரம் தொடர்பாக நேற்று இந்திய – சீன அதிகாரிகள் மட்டத்தில் பலமணி நேரம் பேச்சுவார்த்தையும் நடத்தப்பட்டது.
சீனாவுக்கு கண்டனம்
இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சீனாவுக்கு எதிரான கண்டனக்குரல்கள் வலுத்துள்ளதுடன், சீனப் பொருட்களை பலர் புறக்கணித்தும் வருகின்றனர். சீனாவின் ஆப்களையும் மக்கள் புறக்கணிக்க தொடங்கியுள்ளனர். சீனாவின் அத்துமீறலைக் கண்டித்து நாட்டின் பல பகுதிகளில் போராட்டங்கள் நடத்தப்படுகிறது. அப்போது சீன அதிபரின் புகைப்படங்களை தீயிட்டு எரித்து போராட்டக்காரர்கள் தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.
சீன அதிபருக்கு பதில் வடகொரிய அதிபர்
அந்த வகையில், மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்த பாரதிய ஜனதா கட்சியினர், சீன அதிபரை கண்டித்து நடத்திய போராட்டம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாஜகவினர் சிலர் சீன அதிபர் ஷி ஜின் பிங்கிற்கு பதிலாக வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னின் உருவ பொம்மையை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவை சேர்ந்த ஒருவர் கூறுகையில், லடாக்கில் சீனாவின் அத்துமீறலை கண்டித்து நாங்கள் போராட்டம் நடத்துகிறோம். சீனாவின் பிரதமர் கிம் ஜாங் உன்னுக்கு எதிராகதான் நாங்கள் போராட்டம் நடத்துகிறோம். சீன பொருட்களை மக்கள் புறக்கணிக்க வேண்டும். பொருளாதார ரீதியாக சீனாவை பாதிப்படைய செய்ய வேண்டும். இவ்வாறு அந்த நபர் கூறியுள்ளார்.
அதிபர்? பிரதமர்?
சீனாவின் அதிபர் ஷி ஜிங் பிங்கை சீன பிரதமர் எனக் கூறும் பாஜகவைச் சேர்ந்த அந்த நபர், சீன அதிபருக்கு பதிலாக வடகொரிய அதிபரின் உருவபொம்மையை தீ வைத்து எரித்து போராட்டம் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.