சுஷாந்த் சிங்கின் மரணத்தைத் தொடந்து சமூக வலைதளங்களில் தொடர்ந்து பல்வேறு துறைகளில் புரையோடியிருக்கும் நெப்பாட்டிஸம் பற்றிய உரையாடல் தொடங்கியுள்ளது. திறமையில்லாதவர் எவ்வளவு பெரிய பின்புலம் கொண்டவராக இருந்தாலும் நட்சத்திர அந்தஸ்தை எட்டுவதில்லை என்று பலரும் கூறி வருகின்றனர்.

கலைஞர்- ஸ்டாலின் – உதயநிதி

ஒரு அரசியல் கட்சியின் தலைவரின் வாரிசாக இருந்தாலும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் என்ற நிலையிலிருந்து கட்சியின் தலைவராக உயர்ந்திருக்கும் ஸ்டாலினை யாரும் குறைகூற முடியாது. ஆனால் கட்சியில் மூத்த உருப்பினர்கள் அத்துணைபேர் இருக்க உதயநிதியை அடுத்த தலைவராக முன் நிறுத்தினால் அது நெபாட்டிசம் அன்றி வேறென்ன என்று ஆர்.ஜே ராஜ்வேல் பிரபல தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் கேள்வி எழுப்பியுள்ளார்.

MSME குடும்பத் தொழில்கள்

சமீபத்தில் லிட்டில்டாக்ஸ் லைவில் தீபிகாவுடன் உரையாடிய சுரேஷ் சம்பந்தம் பெரிய தொழில் பின்புலம் இல்லாமல் தன்னைப் போன்றவர்கள் எப்படிப் ஆரெஞ்ஸ்கேப் போன்ற பெரிய தொழில் நிறுவனங்களைத் தொடங்குகிறார்கள். MSME எனப்படும் சிறு\குறு தொழில்கள் எப்படி பெரும்பாலும் குடும்பத் தொழில்களாகவேயுள்ளன என்பதையும், எப்படி தகுதி அடிப்படையில் ஒருவர் அடிமட்ட ஊழியனாகத் தொடங்கி உரிமையாளர்களாகும் வாரிசுகளின் வெற்றி நெப்பாட்டிஸம் ஆகாது என்பதையும் அழகாக விளக்கினார்.

அனில்- முகேஷ் அம்பானி

அம்பானியின் வாரிசு என்ற ஒரே தகுதியின் அடிப்படையில் எப்படி அடுத்தடுத்த தலைமுறை அம்பாணிகள் பெரிய தொழில் குழுமங்களின் உரிமையாளர்கள் ஆகிறார்கள் என்பதைப் பற்றி சுரேஷ் கேள்வி எழுப்பினார். கமலஹாசனின் மய்யம் நிகழ்த்திய மற்றொரு விவாதத்தில் கலந்துகொண்டு பேசிய கிரிக்கின்ஃபோவின் நிறுவனர்களுள் ஒருவரான பத்ரி சேஷாத்ரி எல்லோரும் வெற்றிவாகை சூடும் முகேஷ் அம்பானியைப் பற்றியே பேசுகிறார்கள். கிட்டத்தட்ட  திவாலாகும் நிலையில் இருக்கும் அவரது சகோதரர் அனில் அம்பானியைப் பற்றி யாருமே பேசவில்லை. தொடர்ந்து நஷ்டத்தில் இயங்கிவரும் நிறுவனங்களுக்குத் தனியார் வங்கிகள் உதவ மாட்டாது. அரசு வங்கிகள்தான் அரசியல் செல்வாக்கிற்கு அடிபணிந்து இதுபோன்ற சுமைகளை மக்களின் வரிப்பணத்தின்மேல் சுமத்துகின்றன. அதுவும் ஒருவகை நெபாட்டிஸம்தான் என்று வாதிட்டார்.

திரைத்துறையில் நெப்பாடிஸம்

தமிழ் திரைப்பட நடிகை குஷ்பு எந்தத் துறையிலும் முதல் அடி எடுத்துவைப்பதற்கு வேண்டுமானால் அவர்களது பின்புலம் உதவலாம். ஆனால் திறமையும், கடின உழைப்பும், சிறிது அதிர்ஷ்டமும் இல்லையென்றால் யாரும் நட்சத்திர அந்தஸ்திற்கு உயர முடியாது என்றுகூறி அபிஷேக் பச்சன், ஸ்ருதிஹாசன், விக்ரம் பிரபு போன்றவர்களை உதாரணம் காட்டினார்.

இன்று நேற்றல்ல இதிகாச காலத்திலிருந்தே சமூகத்தின் பெரும் அந்தஸ்தில் இருந்தவர்களிடம் இந்த நெப்பாட்டிஸம் ஒரு மன நோயாகவே இருந்து வந்ததற்கு சான்றுகள் பல.  சுஷாந்தைப்போன்ற ஏகலைவர்கள் திரைவானில் நிரந்தர இடம் கேட்டு நட்சத்திர கூட்டங்களில் கலப்பதில்லை. அவர்கள் நூற்றாண்டிற்கு ஒருமுறை பூமிக்கு மிக அருகில் வரும் வால் நட்சத்திரங்கள்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here