நள்ளிரவு முதல் முழு ஊரடங்கு அமலுக்கு வந்ததை தொடர்ந்து, கட்டுப்பாடுகளை மீறி வெளியே வந்தால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கொரோனா பாதிப்பு
கொரோனா வைரஸின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் அதனை கட்டுப்படுத்தும் பணியில் மத்திய – மாநில அரசுகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. மார்ச் 24ம் தேதி முதல் மே 31ம் தேதி வரை 4 கட்டங்களாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. பின்னர் ஜூன் 1ம் தேதி முதல் சில தளர்வுகளுடன் 5ம் கட்ட ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில் தமிழகத்தில் குறிப்பாக சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கொரோனாவின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
ஊரடங்கு அமல்
இதனால், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய நான்கு மாவட்டங்களில் ஜூன் 19ம் தேதி முதல் ஜூன் 30 தேதி வரை முழு ஊரடங்கை தமிழக அரசு அறிவித்தது. இந்த முழு ஊரடங்கு நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது. ஊரடங்கு காலத்தில் மருத்துவமனைகள், மருத்துவ பரிசோதனை கூடங்கள், மருந்தகங்கள் செயல்படவும், ஆம்புலன்ஸ், அமரர் ஊர்திகள் இயங்கவும் அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. மேலும், மருத்துவ தேவைகளுக்கு மட்டும் தனியார் வாகனங்கள், ஆட்டோ, டாக்சி போன்றவற்றை உபயோகப்படுத்திக் கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.
கட்டுப்பாடு
பொதுமக்கள் பிற இடங்களுக்கு இருசக்கர வாகனங்கள், கார்களில் செல்ல முற்றிலுமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்களை வாங்க விரும்பும் மக்கள், தங்கள் பகுதிகளில் இருந்து 2 கிலோ மீட்டர் தொலைவுக்குள் இருக்கும் கடைகளுக்கு சென்று வாங்கிக்கொள்ள மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். ஓட்டல்களில் உணவு வாங்கி சாப்பிட விரும்புபவர்கள், தொலைபேசி மூலம் ஆர்டர் செய்து வீட்டுக்கே உணவை வரவழைத்து வாங்கிக்கொள்ளலாம். உணவுப் பொருட்களை டெலிவரி செய்யும் ஊழியர்கள், தாங்கள் பணிபுரியும் நிறுவனத்திடம் இருந்து உரிய அடையாள அட்டையை பெற்று வைத்திருக்க வேண்டும்.
எந்த தளர்வும் இல்லை
ஊரடங்கு காலத்தில் வரும் 2 ஞாயிற்றுக்கிழமைகளில் எந்த தளர்வும் இல்லாமல் முழு ஊரடங்கு அமலில் இருக்கும். அன்றைய தினங்களில், கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டு இருக்கும். மக்கள் வீட்டை விட்டு வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது. அந்த 2 நாட்களில் பால் விநியோகம், மருத்துவமனைகள், மருந்துக்கடைகள், ஆம்புலன்ஸ் மற்றும் அமரர் ஊர்தி தவிர, எந்தவிதமான வாகன போக்குவரத்துக்கும் அனுமதி கிடையாது.
தீவிர கண்காணிப்பு
முழு ஊரடங்கையொட்டி சென்னை நகரம் முழுவதும் போலீஸ் கண்காணிப்பு வளையத்தில் கொண்டு வரப்பட்டு உள்ளது. அத்தியாவசிய தேவை இல்லாமல் வெளியே வரும் நபர்கள் டிரோன் கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். முறையான அனுமதி இல்லாமல் நகரில் இருந்து வெளியே செல்லவும், உள்ளே வரவும் அனுமதியில்லை. ஊரடங்கின்போது அரசு உத்தரவை மதிக்காத, சமூக இடைவெளியை பின்பற்றாத நபர்கள், முக கவசம் அணியாத நபர்கள், வாகன ஓட்டிகள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் மீது நடவடிக்கை எடுக்க அந்தந்த காவல் நிலைய இன்ஸ்பெக்டர்களுக்கு முழு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.