இயக்குனர் பீட்டர் பாலை மறுமணம் செய்ய உள்ள நடிகை வனிதா, தனக்கு குடும்பத்தினரின் ஆதரவு இல்லை என வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

திருமணம், விவாகரத்து

தென்னிந்திய திரை நட்சத்திர ஜோடியான விஜயகுமார் – மஞ்சுளா தம்பதியரின் மகள் நடிகை வனிதா. கடந்த 1995ம் ஆண்டு வெளியான சந்திரலேகா படம் மூலம் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானவர், அதன்பிறகு மாணிக்கம் எனும் படத்தில் நடித்தார். இரு படங்களும் சரியாக ஓடாததால் சினிமாவை விட்டு விலகிய வனிதா, நடிகர் ஆகாஷை திருமணம் செய்து 2007ம் ஆண்டு விவாகரத்து செய்தார். அதன்பின் ஆனந்த் ஜெய் ராஜன் என்பவரை திருமணம் செய்து பின்னர் 2010ல் அவரை விவாகரத்து செய்தார். வனிதாவிற்கு முதல் கணவர் மூலம் இரு குழந்தைகளும், இரண்டாவது கணவர் மூலம் ஒரு குழந்தையும் உள்ளனர். இதனிடையே நடன இயக்குனர் ராபர்ட்டுன் கிசுகிசுக்கப்பட்ட வனிதா, வருகிற 27ம் தேதி பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்து கொள்ள உள்ளார். அதற்கான திருமண அழைப்பிதழும் வெளியானது.

மனதை திருடிய பீட்டர் பால்

இதுகுறித்து வனிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; பீட்டர் பால் எனது வாழ்க்கையில் நுழைந்துள்ளார். அவருடன் இருக்கும்போது பாதுகாப்பாக உணர்கிறேன். ஒரு நண்பராக வந்து எனது வாழ்க்கையின் பிரச்சனைகளை சரிபடுத்தினார். என்னை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக தெரிவித்ததும் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். எங்கள் திருமணத்துக்கு எனது குழந்தைகளும் சம்மதம் தெரிவித்துவிட்டனர். இது எனது வாழ்க்கையின் சிறந்த தருணம். எனது குடும்பம் என சொல்லிக் கொள்பவர்களிடம் இருந்து எனக்கு எந்தவிதமான ஆதரவோ, உதவியோ கிடைக்கவில்லை. என் மகிழ்ச்சிக்காகவும் குழந்தைகளுக்காகவும் வாழ முடிவு செய்துள்ளேன். என் இதயத்தை திருடிய பீட்டர் பால் ஒரு இயக்குநர். அன்பானவர். நேர்மையானவர், அவரது படைப்பு விரைவில் திரையில் வரும். இவ்வாறு அந்த அறிக்கையில் வனிதா குறிப்பிட்டுள்ளார்.

மறுமணம்

ஜூன் 19ம் தேதி முதல் மற்றொரு முழுமையான லாக்டவுனால் சென்னை அடைக்கப்பட இருக்கும் நிலையில், நடிகை தனது அறிக்கையில் திருமண நிகழ்வில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் மட்டுமே கலந்துகொள்வர்கள் என்றும் அரசாங்க விதிமுறைகளின்படி நிகழ்ச்சி நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் “திருமணத்திற்குப் பிறகு தனது ரசிகர்கள் மற்றும் நலம் விரும்பிகள் மற்றும் ஊடக நண்பர்கள் அனைவருக்கும், திருமண படங்கள் மற்றும் வீடியோவை வெளியிடுவோம்” என்றும் அவர் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here