சீனாவின் லடாக் தாக்குதலையடுத்து இந்தியா-சீனா போர் வெடிக்குமானால் அது மூன்றாம் உலகப்போருக்குக்கு வழிவகுத்துவிடுமோ என்ற அபாயம் உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.
கொரோனா தொற்று தொடங்கிய உடனேயே உலக நாடுகள் பலவும் இது அடுத்த உலகப்போருக்கு சீனா பார்க்கும் ஒத்திகை என்ற அளவில் கருத்து தெரிவித்தனர். இந்தியா சீனாவிடம் தலையையும் அமெரிக்காவிடம் வாலையும் கொடுத்துவிட்டு இடுக்கியில் மாட்டியதுபோல் நெருக்கடியில் உள்ளது. இந்தியாவின் ஆதரவு யார் பக்கம் என்பதைப் பொருத்தே 21 ஆம் நூற்றாண்டின் தலையெழுத்து இருக்கும்.
பிரிக்ஸ் நாடுகள்
வல்லரசு கனவுகண்ட மூன்றாம் உலக நாடுகள், பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்ரிkகா சேர்ந்து BRICS என்ற கூட்டியக்கத்தை உருவாக்கின. 2050 வாக்கில் உலகின் ஒட்டுமொத்த உற்பத்திப் பொருள்களில் பெரும்பகுதியைச் சீனாவும் இந்தியாவும் தயாரிக்கும், பிரேசிலும் ரஷ்யாவும் அதற்கான மூலப் பொருளை வழங்கும், தென் ஆஃப்ரிக்காவின் மனித, கனிம வளமும் பெரும்பங்கு வகிக்கும் என்று நம்பப்படுகிறது.
சீனாவின் ரெட்டை வேடம்
ஐக்கிய நாடுகளின் சபையில் அமெரிக்காவைப் போல தான்தோன்றித்தனமாகவும் இல்லாமல், ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரிட்டனைப்போல் பரஸ்பரப் புரிந்துணர்வுக்கும் முயற்சிக்காமல் சீனா தொடர்ந்து இந்தியாவுடனான சுமூக உறவை மறுதலித்துக்கொண்டே வந்துள்ளது. இதற்கு வரலாறு நெடுக சாட்சியங்கள் கொட்டிக்கிடக்கின்றன. சமீபத்திய உதாரணம் சீன அதிபர் ஜின் பிங் கடந்த வருடம் அக்டோபர் மாதம் இந்தியப் பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று மகாபலிபுரம் வந்ததும், ஓராண்டு இடைவெளியில் இதுபோன்றதொரு பேரிடர் காலத்தில் லடாக்கில் தாக்குதல் நடத்துவதும்.
இந்தியா யார் பக்கம்
பிப்ரவரி 2020 அமெரிக்க அதிபரின் இந்திய வருகையை அடுத்து சைனாவிலிருந்து தொடங்கிய கொரோனா தொற்று வளைகுடா நாடுகளின் எண்ணெய் வியாபார செல்வாக்கை முடக்கியுள்ளது. அதைத் தொடர்ந்து இந்தியாவின் அரசியல் நகர்வுகள் அமெரிக்காவுக்கு ஆதரிக்கும் வகையில் அமைந்துள்ளது சீனாவை அதிருப்தி அடையச் செய்துள்ளது. 2017ஆம் ஆண்டு நடந்த டோக்லாம் பிரச்சனைக்கு அடுத்து இரண்டு நாடுகளும் முன்னெடுத்த சுமூக முயற்சிகள் அனைத்தையும் செல்லாக்காசாக்கும் விதம் சீனா மீண்டும் லடாக் தாக்குதலைத் தொடங்கியுள்ளது. இருபக்கமும் உயிர்ச்சேதம் அதிகம். இந்தியா சீனாவிற்கு பதிலடி கொடுக்கப் போகிறதா? அல்லது மீண்டும் நட்புக்கரம் நீட்டப் போகிறதா? என்பதைப் பொறுத்தே மூன்றாம் உலகப் போர் தொடங்குமா, தவிர்க்கப்படுமா என்பது அமையும்.