கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வீட்டைவிட்டு வெளியில் செல்லவே பயமாக உள்ளது என்று நடிகை தமன்னா கூறியுள்ளார்.
கொரோனா
சீனாவின் வுஹான் மாகாணத்தில் முதன்முதலாக கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவிலும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து காணப்படுவதால் அதனை கட்டுப்படுத்தும் பணியில் மத்திய – மாநில அரசுகள் முழு வீச்சில் ஈடுபட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக மார்ச் 25ம் தேதி முதல் மே 31ந் தேதி வரை 4 கட்டங்களாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தற்போது சில தளர்வுகளுடன் ஜூன் 30 வரை 5ம் கட்ட ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கும் திரைப்பிலங்கள் பலர் பொதுமக்களை வீடுகளில் இருக்கும்படி விழிப்புணர்வு வீடியோக்கள் மூலம் வலியுறுத்தி வருகின்றனர்.
பாகுபலி அவந்திகா
இந்த நிலையில், சமீபத்தில் பேட்டி ஒன்றை அளித்துள்ள நடிகை தமன்னா, கொரோனா அச்சுறுத்தல் உள்ள தற்போதைய சூழ்நிலையில் வெளியில் அடி எடுத்து வைக்கவே பயமாக உள்ளது எனத் தெரிவித்தார். தமன்னா மேலும் கூறுகையில்; எனது திரையுலக வாழ்க்கையை இப்போது திரும்பி பார்த்தாலும் ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. மனதுக்கு பிடித்த தொழிலை செய்ய வேண்டும் என்றுதான் எல்லோரும் விரும்புவார்கள். ஆனால் அந்த தொழிலுக்கு வரும் எல்லோருமே என்னை மாதிரி உயர்ந்த இடத்துக்கு வருவார்களா என்பது தெரியாது. எனக்கு கிடைத்து இருப்பதை அதிர்ஷ்டமாகவே பார்க்கிறேன். இத்தனை ஆண்டு சினிமா வாழ்க்கையில் பாகுபலி படத்தில் நான் நடித்த அவந்திகா கதாபாத்திரத்தை மறக்கவே முடியாது. அந்த படம் எனக்கு மிகவும் சவாலாகவும் இருந்தது.
வெப் தொடரில் தமன்னா!
இந்த ஊரடங்கு காலத்தில் சமையல் கற்று இருக்கிறேன். தமிழில் ஒரு வெப் தொடரில் நடிக்க வீட்டில் இருந்தே வேலை செய்கிறேன். கொரோனா அச்சுறுத்தல் உள்ள இப்போதைய சூழ்நிலையில் வெளியில் அடி எடுத்து வைக்கவே பயமாக உள்ளது. மீண்டும் சினிமாவில் நடிப்பதற்காக படப்பிடிப்பு அரங்குக்கு செல்லும் நாளை ஆர்வமாக எதிர்பார்க்கிறேன். நம்மால் கோவிட் 19 வைரஸை எளிதாக ஜெயிக்க முடியும். அதற்கு நாம் செய்ய வேண்டியது சின்ன சின்ன விஷயங்கள்தான். நாம் அனைவரும் இந்த நேரத்தில் வீட்டில்தான் இருக்க வேண்டும். இப்போது அதுதான் நமக்கு பாதுகாப்பு. கொரோனா வைரஸிடம் இருந்து ஒவ்வொருவரும் பாதுகாப்பாக இருப்பது நமது கையில்தான் இருக்கிறது. எனவே அரசாங்கம் சொல்வதைக் கேளுங்கள். சோப்பைப் பயன்படுத்தி கைகளைக் கழுவுங்கள். விலகி நின்று ஒன்றிணைவோம். கொரோனா வைரஸை ஒழிப்போம்.
மனதில் அழகு
மனதின் மூலம் தான் மனிதர்களுக்கு அழகு வருமே தவிர, வெளிப்புற தோற்றம், நிறம் இவற்றில் அழகு என்பது இல்லை. எனக்கு மனதில் அழகும் நன்னடத்தையும் இருப்பதால் தான் கோடிக்கணக்கான ரசிகர்களை சம்பாதித்து இருக்கிறேன். 13 வயதிலேயே சினிமாவில் நடிக்க வந்து விட்டேன். இவ்வாறு நடிகை தமன்னா கூறியுள்ளார்.