கொரோனா ஊரடங்கு காரணமாக கேரள முதல்வர் பினராயி விஜயனின் மகள் திருமணம் இன்று மிக எளிமையாக நடைபெற்றது.

ஊரடங்கு விளைவுகள்

உலகை வருத்தும் உயிர்க்கொல்லியான கொரோனா வைரஸ் பாதிப்பைக் கட்டுக்குள் கொண்டுவர நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்கான அனுமதி மட்டுமே விதிக்கப்பட்டிருந்தது. பொது விழாக்கள், கூட்டங்கள் மற்றும் வழிபாடுகள் நடத்துவதற்கு தடையும் விதிக்கப்பட்டிருந்தது. 4 ஆம் கட்ட ஊரடங்கிற்குப் பிறகு, திருமணம் உள்ளிட்ட விஷேசங்களை, மிகக்குறைந்த எண்ணிக்கையிலான நபர்களைக் கொண்டு மட்டுமே நடத்த வேண்டும் உள்ளிட்ட சில தளர்வுகளைத் தந்தது அரசு.

எளிய திருமணம்

அரசு விதித்துள்ள சமூக இடைவெளியுடன், ஒவ்வொருவரும் தத்தம் வீட்டு விழாக்களை நடத்திக்கொள்ள வேண்டும் என்ற பொதுவிதியை மதித்து, கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தனது மகளின் திருமணத்தை எளிமையான முறையில் நடத்தி வைத்துள்ளார். முதலமைச்சர் பினராயி விஜயனின் மகளும், தகவல் தொழில்நுட்ப முனைவோருமான வீணாவுக்கும், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் தேசியத் தலைவர் முகம்மது ரியாஸ்க்கும் இன்று திருமணம் நடந்தது. முதலமைச்சர் வீட்டுத் திருமணம் என்றில்லாமல், எல்லோரும் போற்றத்தக்க வகையில் மிக எளிமையான முறையில் திருமணம் நடந்து முடிந்துள்ளது.

முன்னுதாரணம்

அரசு விதித்துள்ள ஊரடங்கு வழிமுறைகளைப் பின்பற்றி, எளிமையாக நடந்த இந்த திருமணத்தில், குறைந்த எண்ணிக்கையிலான குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே பங்கேற்றனர். ஒரு சில முக்கிய உறவினர்கள் மற்றும் தொழில்துறை அமைச்சர் ஜெயராஜன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் கிருஷ்ணன் நாயர், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத் தலைவர் தலிவர் சஜீஸ் உள்ளிட்ட சிலரே பங்கெடுத்தனர். ஒரு முதலமைச்சர் இல்லத்திருமண விழா என்றில்லாமல், பொதுமக்களுக்கான  முன்னுதாரணமாக மிக எளிமையுடன் இந்தத் திருமணம் நடந்தேறியது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here