நடிகர் கவுண்டமணியை ஒருமுறையாவது பார்த்துவிட வேண்டும் என்கிற ஆசை இருப்பதாக இயக்குநர் செல்வராகவன் விருப்பம் தெரிவித்துள்ளார்.

வித்தியாசமான கதைகள்

வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை இயக்குவதில் வல்லவரான செல்வராகவனுக்கு, தனி ரசிகர் பட்டாளம் உண்டு. இருபது வருடங்களுக்கு முன்பு எடுக்கப்பட்ட ‘துள்ளுவதோ இளமை’ திரைப்படம் தமிழ் சினிமாவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. ‘காதல் கொண்டேன்’, ‘மயக்கம் என்ன’ போன்ற காதல் படங்கள் தமிழ் சினிமாவை அடுத்த தளத்திற்கு எடுத்து சென்றது. புதுப்பேட்டை என்ற கேங்ஸ்டர் படத்தை இயக்கியதன் மூலம், சினிமாவில் புது அத்தியாயத்தை தொடங்கி வைத்தவர் செல்வராகவன். கதாநாயகன் என்றால் அழகாகவும், மிடுக்காகவும் தான் இருக்க வேண்டும் என்ற பிம்பத்தை உடைத்தெறிந்தவரும் இயக்குநர் செல்வராகவன் தான்.

இளம் இயக்குநர்களின் ஹீரோ

தமிழ் சினிமாவில் இயக்குனராக சாதிக்க வேண்டும் என துடிக்கும் பல இளம் துணை இயக்குநர்களின் நாயகனாக வலம் வரும் செல்வராகவனின் படைப்புகளில் உள்ள காதல், ஒரு இயல்பான இளைஞர்களின் அணுகுமுறையுடன் தொடர்புள்ளதாக பலர் எண்ணுகின்றனர். இவரின் ஒவ்வொரு படைப்பும் தமிழ் சினிமாவில் ஏதோ ஒரு வகையில் அதிர்வலைகளை ஏற்படுத்திக் கொண்டே இருக்கிறது.

ஒருமுறையாவது பார்க்கனும்

இந்நிலையில், தனது தீராத ஆசை ஒன்றினை பற்றி செல்வராகவன் ஒரு பேட்டியில் கூறியுள்ளார். அது காமெடி நடிகர் கவுண்டமணியை நேரில் சந்தித்து பேச வேண்டும் என்பது தானாம். சாதாரண ரசிகன் என்பதையும் தாண்டி, நான் கவுண்டமணியின் வெறி பிடிச்ச ஃபேன் என குறிப்பிட்டுள்ள அவர், அவரை ஒருமுறையாவது வாழ்க்கையில் சந்தித்து விடலாம் என்கிற எண்ணத்தில் தான் வாழ்ந்து வருவதாக தெரிவித்து உள்ளார்.

புகழாரம்

மேலும் தமிழ் சினிமாவின் காமெடி கிங்கான கவுண்டமணியுடன் இணைந்து பணியாற்ற ஆசை எனக் கூறியுள்ள செல்வராகவன், அரசியல், ஆன்மீகம், காதல் போன்ற பொது விஷயங்களை தனக்கே உரிய நையாண்டி தோரணையில் காமெடி செய்து கலக்கியவர் கவுண்டமணி என புகழாரம் சூட்டியுள்ளார். இயக்குநர் செல்வராகவனின் இந்த பேட்டியை பார்த்த ரசிகர்கள், இதுபோன்ற வித்தியாசமான இரு படைப்பாளிகள் இணைந்தால் ஒரு புதுவிதமான படைப்பை எதிர்பார்க்கலாமே என ஏங்கத் தொடங்கிவிட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here