கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க லாக்டவுன் மட்டுமே தீர்வாகாது என மூத்த பத்திரிக்கையாளர் கே.பி. சுனில் கருத்து தெரிவித்துள்ளார்.
பிரத்யேக பேட்டி
littletalks.in இணையதளத்துக்கு கே.பி. சுனில் பிரத்யேக பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க என்ன செய்வது என்று புரியாமல் அரசாங்கம் அர்த்தமில்லாத பல விஷயங்களை செய்து கொண்டிருப்பதாக குற்றம்சாட்டினார்.
தீர்வு என்ன?
மருத்துவ ரீதியாக தீர்வு காணப்பட வேண்டிய கொரோனா பரவலுக்கு என்ன செய்ய வேண்டுமோ அதை செய்யாமல், மாறாக சமூக இடைவெளி மற்றும் மாஸ்க் அணிதல் போன்ற விஷயங்களை மட்டும் அரசு முன்வைத்துக் கொண்டு இருப்பதாக அவர் கூறினார். தினந்தோறும் எத்தனை பேருக்கு தொற்று ஏற்பட்டு இருக்கிறது, எவ்வளவு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர், எத்தனை பேர் உயிரிழந்தார்கள் என்ற புள்ளியல் விவரங்கள் எந்த வகையில் இந்தப் பிரச்சனைக்கு தீர்வாகும் என்றும் சுனில் கேள்வி எழுப்பினார். சரியான தீர்வை கண்டுபிடிக்க முடியாத காரணத்தினால் தற்காலிகமாக மக்களை திருப்திப்படுத்தும் நோக்கில் உலகத்தின் பல்வேறு அரசாங்கங்களும் தங்களின் உண்மையான பொறுப்பைத் தட்டிக் கழிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
எண்ணிக்கை அதிகரிப்பதேன்?
மாஸ்க் அணிவதன் மூலமாகவும், சமூக இடைவெளியை பின்பற்றுவதன் மூலமாகவும் கொரோனா வைரஸ் தொற்றைத் தடுக்க முடியும் என்றால், இத்தனை நாட்களாக லாக்டவுன் நடப்பில் இருந்தும் ஏன் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது? என்று கேள்வி எழுப்பியுள்ள பத்திரிக்கையாளர் சுனில், இந்த பிரச்சனையில் உலக சுகாதார நிறுவனம் தரும் பரிந்துரைகளை ஒவ்வொரு நாடும் அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டுமா என்ற கேள்வி எழுந்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
அவசியம் இல்லை
சரியான தீர்வை கண்டுபிடிக்க முடியாத பட்சத்தில் தாங்கள் நம்பும் ஒரு விஷயத்தை தீர்வு போல முன்வைப்பது உலகம் முழுக்க இருக்கக்கூடிய தலைமைகளின் பிரச்சனை என்று சுனில் கருத்து தெரிவித்தார். இந்தியாவில் உள்ள மக்களின் நோய் எதிர்ப்பு சக்தி, சீதோஷண நிலை, வாழ்க்கைமுறை போன்றவற்றிற்கு ஏற்றாற்போல் நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் மாறாக உலக சுகாதார நிறுவனம் சொல்கிறது என்ற ஒரே காரணத்திற்காக அவர்களின் பரிந்துரைகளை அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என்றும் அவர் கூறினார்.
எச்சரிக்கை
எவ்வளவு காலத்திற்கு லாக்டவுன் மூலமாகவே இந்த பிரச்சனையை தள்ளிப்போட்டுக் கொண்டே இருக்க முடியும் என்று கேள்வி எழுப்பியுள்ள கே.பி. சுனில், ஆங்கில மருத்துவ முறையை தாண்டி இந்தியாவில் வெற்றிகரமாக இருக்கும் உள்நாட்டு வைத்திய முறைகளை பின்பற்றுவது குறித்து கூடுதலான பரிசீலனை அவசியப்படுகிறது என்றும் விளக்கமளித்தார். கொரோனவை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் என்ற பெயரில் அரசாங்கம் எடுக்கும் முயற்சிகளும், செயல்பாடுகளும் தீர்வை நோக்கிய திசையில்தான் பயணிக்கின்றனவா என்பது குழப்பமாக இருக்கிறது என்றும் விரைவில் இப்பிரச்சனைக்கு சரியான தீர்வை அடைய முடியாத பட்சத்தில் அதிக மக்கள் தொகை கொண்ட இந்தியா போன்ற தேசம் பெரும் சிக்கலை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்றும் மூத்த பத்திரிக்கையாளர் சுனில் எச்சரித்துள்ளார்.