வெற்றிமாறன் இயக்கத்தில் மிகப்பெரிய வெற்றி பெற்ற ‘அசுரன்’ திரைப்படம் சீன மொழியில் ரீமேக் ஆகவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
‘அசுரன்’
வெற்றிமாறன் இயக்கத்தில், தனுஷ் நடித்து சமீபத்தில் வெளியாகி பெரிதளவு பேசப்பட்ட திரைப்படம் ‘அசுரன்.’ இப்படத்தில் தனுஷ் வயதான அப்பா கேரக்டர் மற்றும் இளவயது மகன் கேரக்டரில் நடித்து அனைவரின் பாராட்டையும் பெற்றார். தனுஷூக்கு ஜோடியாக மலையாள நடிகை மஞ்சுவாரியர் நடித்திருந்தார். அறிமுக நடிகர்கள் கென் கருணாஸ், டிஜே, ஆடுகளம் நரேன், அம்மு அபிராமி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
மற்ற மொழிகளிலும் ரீமேக்
வசூல் ரீதியாக இப்படம் மிகப்பெரிய வெற்றியடைந்தது. நடிகர் தனுஷுக்கு முதல் முறையாக 100 கோடி வசூலை ஈட்டித் தந்த படம் இதுதான். ஒரு படம் மிகப்பெரிய வெற்றியடைந்தால் அதனை மற்ற மொழிகளில் ரீமேக் செய்வது வழக்கம். அந்த வகையில் இப்படம் தெலுங்கில் ‘நரப்பா’ என்ற பெயரில் ரீமேக் ஆகிறது. இதில் தனுஷ் கதாபாத்திரத்தில் தெலுங்கு நடிகர் வெங்கடேஷ் நடிக்கவிருக்கிறார். மஞ்சு வாரியர் கதாபாத்திரத்தில் நடிகை பிரியாமணி நடிக்கிறார்.
சீன மொழியிலும் ரீமேக்
இந்நிலையில், ‘அசுரன்’ திரைப்படம் சீன மொழியிலும் ரீமேக்காகவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மலையாளத்தில் புகழ் பெற்ற திரைப்படமான ‘திரிஷ்யம்’, தமிழில் ‘பாபநாசம்’ என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. இப்படம் சமீபத்தில் சீன மொழியில் ரீமேக்கானது என்பது குறிப்பிடப்பட்டது. ரஜினி நடித்த 2.0, பாகுபலி ஆகிய படங்கள் சீன மொழியில் டப் செய்யப்பட்டு ரிலீசானது. இதனையடுத்து ‘அசுரன்’ படத்தை ரீமேக் செய்யவிருப்பதாகவும், இதற்காக சீன தயாரிப்பாளர் ஒருவர், ‘அசுரன்’ பட தயாரிப்பாளரிடம் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் தகவல் கசிந்துள்ளது. கொரோனா ஊரடங்கு முடிந்த பின்பு இதன் அதிகாரப்பூர்வமான அறிவிப்புகள் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.