பொதுமக்களின் முழு ஒத்துழைப்பு இல்லாமல் கொரோனா நோய் தொற்று பரவலை தடுப்பது சாத்தியம் ஆகாது என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
மக்கள் ஒத்துழைப்பு தேவை
கொரோனா தடுப்பு பணிகள் குறித்து விரிவாக விளக்கமளித்து, பொது மக்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். அதில், ஊரடங்கை அரசு அமல்படுத்தினாலும், பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தாலும் மக்களின் முழு ஒத்துழைப்பு இல்லை என்றால், இந்நோய் பரவலை தடுப்பது சாத்தியம் ஆகாது என தெரிவித்துள்ளார்.
முக கவசம் அவசியம்
வெளியில் செல்லும் போது அவசியம் ஏற்பட்டால் முகக்கவசம் அணிய வேண்டும் எனவும் தனிமனித இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். மக்களின் வாழ்வாதாரத்தையும், நாட்டின் பொருளாதாரத்தையும் காக்க அனைவரும் கடமையை உணர்ந்து செயல்பட வேண்டும் எனவும் முதலமைச்சர் கேட்டுக் கொண்டுள்ளார்.
குணமடைவோர் எண்ணிக்கை அதிகம்
கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்புவோர் சதவிகிதம் தமிழகத்தில்தான் அதிகம் என சுட்டிக்காட்டிய அவர், கொரோனாவால் உயிரிழப்போரின் சதவிகிதம் இந்தியாவில் மட்டுமல்ல, உலகத்திலேயே தமிழகத்தில் தான் மிகக்குறைவு என்றார்.
அதிகளவில் சோதனை
நாட்டிலேயே அதிகபட்சமாக தமிழகத்தில் தான் அதிக சோதனை மையங்கள் உள்ளதாகவும், நாள் ஒன்றுக்கு சராசரியாக 13 ஆயிரம் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் முதலமைச்சர் பழனிசாமி அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.