புதுச்சேரியில் கொரோனா நோய் பாதிப்பால் உயிரிழந்தவருக்கு உரிய மரியாதை கூட கொடுக்காமல், அந்த நபரின் உடலை சுகாதாரத்துறையினர் 20 அடி ஆழ பள்ளத்தில் வீசிச்செல்லும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சென்னையைச் சேர்ந்த 40 வயது நபர், நேற்று முன்தினம் புதுச்சேரியில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு திடீரென மயங்கி விழுந்தார். பின்னர் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது, அந்த நபர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். சென்னையில் இருந்து வந்ததால் மருத்துவர்கள் அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்ட போது, கொரோனா நோய் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து உடலை அதே பகுதியிலேயே அடக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டது. ஆம்புலன்ஸ் மூலம் அந்த நபரின் உடலை கொண்டு சென்ற சுகாதாரத்துறையினர், 20 ஆடி ஆழ பள்ளத்தில் சடலத்தை தூக்கி வீசிச்செல்லும் வீடியோ காட்சி தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.















































