கர்ப்பிணி யானை அன்னாசி பழத்தில் வெடி வைத்து கொல்லப்பட்ட விவகாரத்தில் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்ததாக கூறி முன்னாள் மத்திய அமைச்சர் மேனகா காந்தி மீது கேரள போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

பழத்தில் வெடி

கேரள மாநிலம் அட்டப்பாடி அருகே உள்ள சைலன்ட் வேலி வனப்பகுதியில் ஏராளமான வன விலங்குகள் வாழ்ந்து வருகின்றன. சில தினங்களுக்கு முன் இங்குள்ள கர்ப்பிணி யானை ஒன்று உணவு தேடி ஊருக்குள் வந்தது. அப்போது விஷமிகள் சிலர் அண்ணாசி பழத்துக்குள் வெடிபொருளை வைத்து அந்த யானைக்கு கொடுத்துள்ளனர். இதனை அறியாத யானை, அன்னாசி பழத்தை உண்ட போது திடீரென வெடித்து சிதறியது. இதில் யானையின் வாய் மற்றும் நாக்குப் பகுதி கடுமையாக சேதமடைந்தன.

பரிதாபமாக உயிரிழந்த யானை

வலியால் துடிதுடித்த யானை உணவுகூட உண்ண முடியாமல் தவித்து வந்தது. பின்னர் வெள்ளியாறின் தண்ணீரில் நின்றபடி தனது உயிரைவிட்டது. யானை தண்ணீரில் நின்றபடி உயிர்விடும் புகைப்படம் சமூக வலைதளங்களில் தீயாக பரவி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த கொடூரச் செயலுக்கு திரையுலகினர் உள்பட பலர் தங்களது கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர்.

மேனகா காந்தி குற்றச்சாட்டு

பாஜக மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான மேனகா காந்தி டுவிட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டார். அதில், மலப்புரம் பகுதி குற்றச்செயல்களுக்கு பெயர் போனது, முக்கியமாக விலங்குகளுக்கு எதிராக. விலங்குகளை கொள்பவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட்டதில்லை. எனவே அவர்கள் தொடர்ந்து இதைச் செய்கிறார்கள் எனக் கூறியிருந்தார்.

மாவட்ட பிரச்சனை

யானைக் கொல்லப்பட்டது மலப்புரம் மாவட்டம் அல்ல, பாலக்காடு மாவட்டமாகும். ஆனால் மலப்புரத்தை குறிப்பிட்டு மேனகா காந்தி டுவிட்டரில் தெரிவித்திருந்தார். இதை முதல்வர் பினராயி விஜயன் கூட கண்டித்து, குறிப்பிட்ட மாவட்டத்தின் மீது அவதூறு பரப்புவதாக தெரிவித்திருந்தார்.

வழக்குப்பதிவு

இந்த சூழலில் மலப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஜலீல் என்பவர் மேனகா காந்தி மீது போலீஸில் புகார் அளித்தார். அதில், ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகளைக் கூறி மாவட்ட மக்களை அவமானப்படுத்துகிறார். கலவரத்தையும், அமைதியற்ற சூழலையும் ஏற்படுத்த முயல்கிறார் எனத் தெரிவித்திருந்தார். இதையடுத்து மலப்புரம் போலீசார் மேனகா காந்தி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து மலப்புரம் மாவட்ட எஸ்.பி. அப்துல் கரீம் கூறுகையில், மேனகா காந்தி மீது இதுவரை 6 புகார்காள் தரப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here