இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நடவடிக்கைகளால் சீன அரசு நிலைகுலைந்து போய் உள்ளதுடன், பதற்றத்திற்கும் உள்ளாக்கியுள்ளது.
பின்வாங்கியது சீனா
இந்தியா – சீனா எல்லைப் பிரச்சனையில் உலக நாடுகள் பலவும் இந்தியாவுக்கு ஆதரவு தரும் நிலையில் இருக்கிறது. கடந்த ஒரு மாதமாக இந்திய – சீன எல்லையில் போர் பதற்றம் நிலவி வருகிறது. இந்தியாவின் சரியான ராஜாங்க நடவடிக்கைகளால் சீனா தற்போது பின் வாங்கியுள்ளது. எல்லை பிரச்சினையை தீர்க்கும் வகையில் இந்தியா – சீனா ஆகிய நாடுகளின் ராணுவத்தினர் இடையே பேச்சுவார்த்தை நடைபெறவுள்ள நிலையில், தற்போது சீனப் படைகள் கால்வன் பள்ளத்தாக்கு பகுதியிலிருந்து 2 கி.மீ. பின்வாங்கிச் சென்றன. இதற்கு பின்னர் மிகப்பெரிய காரணம் இருக்கிறது.
இலங்கையுடன் பேச்சு
இந்தியா – சீனா பிரச்சனை வந்தபோது பிரதமர் மோடி இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவுடன் பேசினார். இலங்கை – சீனா இரண்டும் நட்பு நாடுகள். போர் என்று வந்தால் இலங்கை சீனாவுடன் ஒன்று சேர்ந்து விடும் என்ற எண்ணத்தினால் இலங்கையுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
இலங்கையின் நிலைப்பாடு
அதில், இந்திய தனியார் நிறுவனங்களை இலங்கையில் தொழில் தொடங்க வழிவகை செய்யப்படும் என்று மோடி உறுதியளித்தார். இதன்பின்பு இந்திய – சீன பிரச்சினையில் இலங்கை தனது நிலைப்பாட்டை அறிவித்தது. அதில் போர் என்று ஒன்று வந்தால் இலங்கை எந்த நாட்டு பக்கமும் நிற்காது. இந்தியா – சீனா இரண்டும் இலங்கைக்கு நட்பு நாடுகள்தான் என்று கூறியது.
அமெரிக்காவுடன் நெருக்கம்
மேலும், இந்தியா அமெரிக்காவுடன் நெருக்கமானது. ஏற்கனவே அமெரிக்க அதிபர் டிரம்ப் சீனா மீது கடும் கோபத்தில் இருக்கிறார். இந்திய – சீன எல்லைப் பிரச்சனை குறித்து நேற்று மோடியும் டிரம்பும் சுமார் 20 நிமிடம் தொலைபேசியில் பேசினர். இதற்குப் பின்பு, அமெரிக்காவில் சீனாவின் பயணிகள் விமானத்தை தடை செய்யும் முடிவுக்கு வந்தார் ட்ரம்ப்.
ஜி8 மாநாட்டில் இணைய முடிவு
அமெரிக்காவின் அழைப்பை ஏற்று ஜி8 குழுவில் இந்தியா இணையவுள்ளது. சீனா ஜி8 குழுவில் இல்லாத நிலையில், இந்தியா அக்குழுவினுள் நுழையவிருப்பது சீனாவை பெரும் பதற்றத்திற்கு உள்ளாக்கியுள்ளது.
இந்தியா – ஆஸ்திரேலியா
கொரோனா வைரஸ் பிரச்சனை, தென் சீன கடல் பிரச்சனை, ஹாங்காங் பிரச்சனை, வர்த்தக போர் என்று பல விஷயங்களில் சீனாவும், ஆஸ்திரேலியாவும் பரம எதிரியாக இருந்து வருகிறது. இந்நிலையில், பிரதமர் மோடி ஆஸ்திரேலியா பிரதமர் ஸ்காட் மோரிசனுடன் ஆலோசனை நடத்தினார். இரண்டு நாட்டு ராணுவமும், கடற்படையும் ஒன்றாக சேர்ந்து செயல்படும் ஒப்பந்தங்களில் கையெழுத்திடப்பட்டது. இந்தியாவிற்கு ராணுவ ரீதியான உதவிகளை செய்ய ஆஸ்திரேலியா முடிவு செய்துள்ளது. இவற்றினால்தான் தற்போது சீனா பின்வாங்கியுள்ளது. இதனால் எல்லைப் பகுதியில் போர் பதற்றம் சற்று குறைந்துள்ளது.