பிரபல தெலுங்கு நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் ரசிகர்கள் மீது நடிகை நிலா போலீசில் புகார் அளித்துள்ளார்.

இந்தியில் கவனம்

தமிழில் 2005ம் ஆண்டு வெளியான அன்பே ஆருயிரே திரைப்படம் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை நிலா. அதனைதொடர்ந்து இசை, லீ, மருதமலை, காளை ஆகிய படங்களில் நடித்தார். மீரா சோப்ரா என்ற இயற்பெயரை கொண்ட நிலா, பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ராவின் உறவினராவார். தமிழ், தெலுங்கில் நடித்து வந்த நிலா பின்னர் இந்திப் படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தினார். எனினும் கடந்த 5 வருடங்களில் இரண்டு இந்திப் படங்களில் மட்டுமே அவர் நடித்துள்ளார்.

ரசிகர் கேள்வி

இந்நிலையில், சமீபத்தில் ரசிகர்களுடன் நடிகை நிலா சமூக வலைத்தளத்தில் கலந்துரையாடினார். அப்போது தெலுங்கில் உங்களுக்கு பிடித்த நடிகர் மகேஷ் பாபுவா? ஜூனியர் என்.டி.ஆரா? என ரசிகர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த நிலா, மகேஷ்பாபு பிடிக்கும் என்றும் நான் ஜூனியர் என்.டி.ஆர் ரசிகை இல்லை. அவரை பற்றி எனக்கு எதுவும் தெரியாது என்றும் பதிலளித்துள்ளார்.

போலிசில் புகார்

நிலாவின் இந்த பதிலை கேட்ட ஜூனியர் என்.டி.ஆரின் ரசிகர்கள் கடும் கோபமடைந்தனர். அவர்கள் நிலாவை சகட்டு மேனிக்கு வலைத்தளத்தில் ஆபாசமாக திட்டியுள்ளனர். சிலர் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியான நிலா, ஐதராபாத்தில் உள்ள சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளார்.

கொலை மிரட்டல்

இதுகுறித்து டுவிட்டர் பக்கத்தில் நிலா கூறியிருப்பதாவது; “ஜூனியர் என்.டி.ஆரை விட மகேஷ்பாபுவை பிடிக்கும் என்றதால் என்னை பாலியல் தொழிலாளி என்றும் ஆபாச படத்தில் நடிப்பவள் என்றும் அழைக்கின்றனர். கொலை மிரட்டல் விடுக்கின்றனர். இதுபோன்ற ரசிகர்கள் கூட்டத்தை வைத்துக்கொண்டு உங்களால் வெற்றிபெற முடியும் என்று நினைக்கிறீர்களா? ஒருவருடைய ரசிகையாக இருப்பது குற்றமா? அனைத்து பெண்களுக்கும் நான் சொல்லிக்கொள்வது நீங்கள் ஜனியர் என்.டி.ஆர் ரசிகையாக இல்லாவிட்டால் பாலியல் தொல்லைக்கு ஆளாகலாம். கொலை செய்யப்படலாம். கூட்டு பாலியல் வன்கொடுமைக்கும் உள்ளாகலாம்.” இவ்வாறு கூறியுள்ளார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here