தியேட்டர்கள் திறந்தவுடன் முதல் படமாக ‘மாஸ்டர்’ திரைப்படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மாஸ்டர் பட வேலைகள்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘மாஸ்டர்’ திரைப்படம், கடந்த ஏப்ரல் 9ம் தேதி ரிலீசாகியிருக்க வேண்டிய நிலையில், கொரோனா ஊரடங்கு காரணமாக தள்ளிவைக்கப்பட்டுள்ளது. ஆனால், சூர்யா இந்த கொரோனா ஊரடங்கை பயன்படுத்தி ஜோதிகாவின் ‘பொன்மகள் வந்தாள்’ திரைப்படத்தை நல்ல விலைக்கு OTT தளத்தில் விற்பனை செய்துள்ளார். மேலும் பல சிறிய பட்ஜெட் தமிழ் படங்களும் OTT தளத்தில் வெளிவருவதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருக்கின்றன.
எப்போது ரிலீஸ்?
ஊரடங்கில் இருந்து சினிமா பணிகளுக்கு அரசு கட்டுபாடுகளுடன் அனுமதி அளித்துள்ளதை அடுத்து, ‘மாஸ்டர்’ படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தற்போது உள்ள சூழலில் படத்தை எப்போது ரிலீஸ் செய்வது என்பது குறித்து முடிவை எடுக்க முடியாமல் இருந்த நிலையில், விஜய்யின் பிறந்த நாளான ஜூன் 22ம் தேதி படத்தை ரிலீஸ் செய்யலாமா என்று ஆலோசிக்கப்பட்டது.
மாஸ்டர் வெளியீடு!
ஆனால், திரையரங்குகள் எப்போது திறக்கப்படும் என உறுதியாக தெரியாததால், அதைப் பற்றியும் அவர்களால் தெளிவான முடிவுக்கு வர முடியவில்லை. மேலும், 2020-ஆம் ஆண்டு தீபாவளிக்கு படத்தை ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டனர். ஆனால், தற்போது திரையரங்கை திறந்தவுடன் முதல் படமாக மாஸ்டர் படத்தை வெளியிடலாம் என படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
டிக்கெட் விலை குறைய வாய்ப்பு
இன்னும் 2 வாரங்களில் ஊரடங்கு நிபந்தனைகளில் சில தளர்வுகளை அறிவித்து சினிமா தியேட்டர்களை திறக்க அனுமதி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஊரடங்கு முடிந்தவுடன் கொரோனா அச்சம் காரணமாக பொதுமக்கள் திரையரங்கம் வருவது சற்று சந்தேகம்தான். இருப்பினும், பொது மக்களை வரவழைக்க திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தினர் டிக்கெட் விலை குறைப்பு போன்ற பல்வேறு நடவடிக்கைகளை எடுக்க திட்டமிட்டு வருகின்றனர்.