கருப்பின இளைஞர் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து அமெரிக்காவில் மக்கள் போராட்டம் தீவிரமடைந்துள்ளதால் அங்கு தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

மரணம்

அமெரிக்காவின் மின்னிசோட்டா மாநில தலைநகரான மினியாபொலிஸ் நகரத்தில், கருப்பினத்தை சேர்ந்த ஜார்ஜ் பிளாய்ட் என்பவர், அம்மாகாண காவலர்கள் வன்முறையாக நடத்தியதால் உயிரிழந்தார். இதுதொடர்பான வீடியோ காட்சிகள் வெளியானதையடுத்து, போலீசாரை கண்டித்து மின்னிசோட்டாவில் போராட்டம் வெடித்தது. 

தீவிரமடையும் போராட்டம்

நியூயார்க், வாஷிங்டன் டிசி, லாஸ் ஏஞ்சல்ஸ், டெல்லாஸ், கலிபோர்னியா என அமெரிக்காவின் பல மாகாணங்களிலும் போராட்டம் தொடர்ந்து வருகிறது. போராட்டக்காரர்கள் சிலர் வெள்ளை மாளிகை முன்பும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஜார்ஜ் படுகொலைக்கு நீதி கேட்டு வெள்ளை மாளிகையை போராட்டக்காரர்கள் சுற்றி வளைத்தனர். கருப்பின மக்களின் போராட்டத்திற்கு ஆதரவாக வெள்ளை இனத்தவரும் இப்போராட்டத்தில் கலந்து கொண்டிருக்கின்றனர்.

போராட்டம், கைது

வெள்ளை மாளிகைக்கு முன் போராட்டம் அதிகரித்து வருவதையடுத்து, தற்போது தேசிய பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். வெள்ளை மாளிகைக்கு வெளியே பெட்ரோல் வெடிகுண்டுகள் வீசப்பட்டதாக கூறப்படும் நிலையில், பாதுகாப்பு படையும் கண்ணீர் புகை குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியதால் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது. போராட்டம் செய்யும் கருப்பின மக்களை தேசிய பாதுகாப்பு படையினர் கைது செய்து வருகின்றனர். தேசிய பாதுகாப்பு படைக்கு கண்டதும் சுட உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதால், இனி போராட்டத்தின்போது துப்பாக்கி சூடு நடக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வன்முறைகளில் ஈடுபட்டதாக இதுவரை சுமார் 5,000 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதிபர் டிரம்ப் பதுங்கல்?

போராட்டக்காரர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் வெள்ளை மாளிகைக்கு உள்ளே அதிபர் டிரம்ப் பதுங்கி இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அங்கு இருந்தபடியே அதிபர் பாதுகாப்பு படை வீரர்களுக்கு உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார்.

சிவில் வார் உருவாகும் நிலை?

தற்போது, அமெரிக்கா மொத்தமாக நிலைகுலையும் சூழ்நிலை ஏற்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. தேசிய பாதுகாப்பு படையினரைவிட அதிகமாக மக்கள் கூட்டம் உள்ளதால் போராட்டத்தை அதிகாரிகளால் கட்டுப்படுத்த இயலவில்லை. இந்த நிலை இன்னும் தீவிரம் அடைந்தால் அங்கு சிவில் வார் உருவாகலாம் என்று மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். அமெரிக்காவில் கடைசியாக 1865-ல் சிவில் வார் எனப்படும் உள்நாட்டு யுத்தம் நடைபெற்றது. ஆப்ரஹாம் லிங்கன் ஆட்சி காலத்தில் தென் அமெரிக்கா, வட அமெரிக்கா இடையில் இந்த உள்நாட்டு யுத்தம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

மார்ட்டின் லூதர் கிங்

அமெரிக்காவில் கருப்பர் இனத்தவருக்கு வாக்குரிமை உள்ளிட்ட மனித உரிமைகளை பெற்றுத் தந்தவர் மார்ட்டின் லூதர் கிங். கருப்பின மக்களின் நம்பிக்கையாக ஜொலித்த இவர், ஏப்ரல் 4, 1968-ல் சுட்டுக்கொல்லப்பட்டார். அப்போதும் தற்போது நடந்து கொண்டிருப்பதைப் போல் நாடெங்கும் போராட்டம் வெடித்தது. ‘கருப்பு காந்தி’ என்று அழைக்கப்பட்ட மார்ட்டின் லூதர் கிங்குக்கு உலகமே கண்ணீர் அஞ்சலி செலுத்தியது. 2020-ல் கொரோனா ஒருபக்கம், இனப் போராட்டம் மறுபக்கம், என அமெரிக்காவின் நிலை இனி என்ன ஆகும் என்பது அச்சத்திற்குறிய ஒரு கேள்வியாகவே இருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here