தொலைக்காட்சி படப்பிடிப்புகளுக்கு அதிகபட்சம் ஐம்பது பேரை அனுமதிக்க வேண்டும் என்று செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜுவிடம் தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் ஆர்.கே. செல்வமணி, சின்னத்திரை சங்கத்தின் தலைவர் சுஜாதா விஜயகுமார், பொதுச் செயலாளர் குஷ்பு உள்பட திரையுலகினர் வலியுறுத்தியுள்ளனர்.
20 பேருக்கு மட்டும் அனுமதி
ஊரடங்கின் காரணமாக இரண்டு மாதங்களுக்கு மேலாக சின்னத்திரை படப்பிடிப்புகள் முடங்கிப்போய் இருந்தன. ஊரடங்கு தளர்வின் ஒரு பகுதியாக 20 பேரை வைத்து சின்னத்திரை படப்பிடிப்பை நடத்திக் கொள்ள அரசு அனுமதியளித்தது. ஆனால் இருபது பேரை மட்டும் வைத்துக்கொண்டு படப்பிடிப்புகள் நடத்த முடியாது என்ற காரணத்தினால் அரசு அனுமதித்த பிறகும் சின்னத்திரை படப்பிடிப்புகள் எதுவும் நடைபெறாமல் இருந்தன.
50 பேரை அனுமதிக்க வேண்டும்
எனவே படப்பிடிப்புகளை தொடங்குவதற்கு ஏதுவாக அதிகபட்சம் 50 பேரை அனுமதிக்க வேண்டும் என்று சின்னத்திரை சங்கம் கூறியுள்ளது. இதுதொடர்பாக பேசிய நடிகை குஷ்பு, ஒரே நேரத்திலேயே அனைத்து விதமான படப்பிடிப்புகளை நடத்தி கொள்ளும்படியாக திட்டம் வகுக்கப்பட்டு இருக்கிறது எனத் தெரிவித்தார். ஆனால் படப்பிடிப்பில் 50 பேரையாவது அரசு அனுமதிக்க வேண்டும் என்றும் கூறினார்.
குஷ்பு வேண்டுகோள்
யார் முதலில் படப்பிடிப்பை தொடங்குவது என்று யோசிக்கவோ அல்லது போட்டி போடவோ இது நேரமில்லை. எனவே இந்த இக்கட்டான சூழ்நிலையில் தயாரிப்பாளர்கள் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.
அரசுக்கு வலியுறுத்தல்
இந்த பிரச்சனை தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய இயக்குனர் ஆர்.கே. செல்வமணி, சிறிய தொலைக்காட்சி தொடர் என்றாலே 100 பேர் பணிபுரியக்கூடிய சின்னத்திரை படப்பிடிப்பில் 20 பேரை மட்டும் வைத்துக்கொண்டு அதை செய்ய முடியாது என்றும் அதிகபட்சம் 50 பேருக்கு அனுமதி அளிக்க வேண்டும் என அரசாங்கத்தை வலியுறுத்தி இருப்பதாகவும் தெரிவித்தார்.