ஆஸ்திரேலியாவில் “தேசிய மன்னிப்பு கோரும் தினம்”
இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் ஆஸ்திரேலிய அரசாங்கத்தின் கொள்கைகள் பூர்வீக மக்களின் குழந்தைகளை பெற்றோரிடமிருந்து பிரித்துவிட வழி செய்தது. அந்த குழந்தைகள் ‘திருடப்பட்ட தலைமுறையினர்’ என்று அறியப்படுகிறார்கள். இந்த அநீதிக்கு வருத்தம் தெரிவிக்கும் விதமாக, 1997ம் ஆண்டு மே 26ம் நாள் “அவர்களது வீட்டுக்குத் திரும்பவைப்போம்” என்ற அறிக்கை, நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. அதில் திருடப்பட்ட தலைமுறையினரிடம் ஆஸ்திரேலிய அரசு மன்னிப்புக் கோர வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டது.
ஆனால், அப்போதைய பிரதமர் ஜோன் ஹோவர்ட் மன்னிப்பு கேட்க மறுத்துவிட்டார். அதன் பிறகு, அரசியல் அங்கீகாரம் இல்லாத நிலையிலும் “மன்னிப்பு தினம்” என்ற கருத்து பரவலாக்கப்பட்டது. “தேசிய மன்னிப்பு தினம்” என்று கொண்டாடுவதற்கும் இயக்கம் உருவானது. அரசியல்வாதிகள், பொது மக்கள் மற்றும் கொள்கை வகுப்பாளர்கள் இடையே கட்டாயப்படுத்தப்பட்டு சிறுவர்கள் அகற்றப்பட்டது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அதன் தாக்கத்தைப் பற்றி பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்துடனும் 1998 ஆம் ஆண்டு மே மாதம் 26 ஆம் நாள் முதல் இந்நாள் தேசிய மன்னிப்பு கோரும் நாளாக நினைவுகூரப்படுகிறது.
இறுதியில், 2008 ஆம் ஆண்டு அன்றைய பிரதமர் கெவின் ரட் “திருடப்பட்ட தலைமுறை”யிடம் நாடாளுமன்றத்தில் பகிரங்கமாக மன்னிப்புக் கோரினார். பாதிக்கப்பட்டவர்களுக்கு செய்யும் குறைந்தபட்ச அடிப்படை நீதியாக இது கருதப்படுகிறது. முதன் முறையாக ஆஸ்திரேலிய அரசாங்கத்தின் சார்பில் மன்னிப்புக் கோரிய சம்பவம் இதுவே.