திமுக அமைப்புச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான ஆர்.எஸ். பாரதி கைது செய்யப்பட்டதற்கு வரவேற்பு தெரிவித்துள்ள பாஜக தேசிய செயலாளர் எச். ராஜா, அடுத்தது தயாநிதிமாறன்? என டுவிட்டரில் பதிவிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சர்ச்சை பேச்சு
கடந்த பிப்ரவரி மாதம் அன்பகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி, பட்டியல் இன மக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து அவர் வருத்தம் தெரிவித்தார்.
புகார், கைது
இந்த நிலையில், ஆர்.எஸ். பாரதி பட்டியல் இன மக்களை அவமதிக்கும் வகையில் பேசியதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் ஆதித்தமிழர் மக்கள் கட்சித் தலைவர் கல்யாண சுந்தரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், ஆர்.எஸ். பாரதியை இன்று காலை கைது செய்தனர்.
இடைக்கால ஜாமீன்
சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட அவரிடம், மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் எழும்பூரில் நீதிமன்ற நீதிபதி செல்வக்குமார் வீட்டிற்கு அழைத்துச் சென்று, நீதிபதி முன்பு ஆஜர்படுத்தினர். அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி, ஜூன் 1ம் தேதி வரை இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
எச்.ராஜா டுவிட்
இந்த நிலையில் ஆர்.எச். பாரதி கைது செய்யப்பட்டது குறித்து பாஜக தேசிய செயலாளர் எச். ராஜா தனது டுவிட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கைது வரவேற்கத்தக்கது. அடுத்து தயாநிதிமாறன் in Waiting list?. எனக் குறிப்பிட்டுள்ளார். ஆர்.எஸ். பாரதி கைது செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், எச். ராஜாவின் இந்த டுவிட்டர் பதிவு மேலும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.