கொலம்பஸ் மறைந்த தினம்
இத்தாலிய நாடுகாண் பயணியும் வணிகரும் காலனித்துவவாதியும் ஆவார். இவர் 1492-இல் அட்லாண்டிக் கடலைக் கடந்து அமெரிக்காவை வந்தடைந்த முதல் ஐரோப்பியர் ஆவார். அவர் இத்தாலியின் செனோவா என்ற குடியரசைச் சேர்ந்தவர் என்று கருதப்படுகிறது.
கொலம்பஸ் ஆசியாவிற்கு, குறிப்பாக இந்தியாவிற்கு புதிய வழியைக் கண்டுபிடிக்க முயன்று, கடைசியில் அவர் அடைந்தது இந்தியா என்றே நம்பினார்.
கொலம்பஸ் அமெரிக்காவைக் கண்டுபிடித்தவராகக் கருதப்படுகின்றார். அவருடைய கடுமையான ஈடுபாட்டின் காரணமாக அமெரிக்காவைப் பற்றி ஐரோப்பா தெரிந்து கொள்ள வழிவகுத்தது. அத்தோடு இன்றைக்கு பல்வேறு கண்டங்களின் உறவிற்கும் அவருடைய கண்டுபிடிப்பே காரணமாகும்
உண்மையாக கொலம்பஸ் அமெரிக்காவை அடைந்த முதல் மனிதர் அல்லர். ஏனென்றால் அங்கே ஏற்கெனவே மக்கள் வாழ்ந்து வந்தனர் என்பதை அவர் கண்டறிந்தார். முதல் ஐரோப்பியரும் அல்லர். ஏனென்றால் வைக்கிங்கள்,வட ஐரோப்பாவிலிருந்து 11-ம் நூற்றாண்டிலேயே வட அமெரிக்காவிற்குச் சென்றுள்ளனர். இருந்தாலும், கொலம்பசின் பயணமே ஐரோப்பியர்களின் அமெரிக்கக்குடியேற்றத்திற்கு அடிப்படையாகும். அதுவே உரேசியா மற்றும் ஆப்பிரிக்காவை அமெரிக்காவுடன் இணைத்ததற்கு முக்கிய காரணமாகும்.
கொலம்பஸ் இத்தாலியின் துறைமுக நகரான ஜெனோவாவில் 1451-ல் பிறந்தார். அவருடைய தந்தை டொமினிகோ கொலம்போ, ஒரு கம்பளித்துணி வியாபாரி. தாய் சுசான்னா போன்டனாரோசா. கொலம்பசிற்கு மூன்று சகோதரர்கள், ஒரு சகோதரி.
1471-இல் கொலம்பஸ் எசுபெனோலா ஃபினான்சியர்சு நடத்திய ஒரு கப்பலில் சேர்ந்தார். அவர் கியோஸ் கியோசு (ஏஜியன் கடலில் உள்ள ஒரு தீவு) பகுதியைச் சுற்றி வந்த அக்கப்பலில் ஒரு வருடம் வேலை செய்தார். சில நாட்கள் நாடு திரும்பிய பின் மறுபடியும் கியோசுப் பகுதியில் மற்றோர் ஆண்டு வேலை செய்தார். இக்கால கட்டத்தில் ஏகயன் துருக்கியர் வசம் இருந்தது (இவர்கள் கான்ஸ்டான்டினோபில்-ஐ மே 29, 1453-ல் கைப்பற்றியிருந்தனர்).
1476-இல் கொலம்பஸ் ஒரு வணிகப்பயணத்தை அட்லாண்டிக் கடலின் மீது மேற்கொண்டார். இந்தக் கப்பல் கேப் ஆஃப் செயின்ட் வின்சென்ட் இன் பிரெஞ்சு பிரைவெட்டீயெர்ஸ்-ஆல் தாக்கப்பட்டது. கொலம்பஸ் கப்பல் எரிந்து போய் அவர் ஆறு மைல்கள் நீந்திக் கரை சேர்ந்தார்.
1477-இல் கொலம்பஸ் லிஸ்பன் நகரில் வாழ்ந்தார். போர்த்துக்கல் கடல் தொடர்பான நடத்தைகளுக்கு ஒரு மையமாக இங்கிலாந்து, அயர்லாந்து, ஐசுலாந்து, மடீயெரா, த அசோர்சு, ஆப்பிரிக்காக்குச் செல்லும் கப்பல்களுடன் விளங்கியது. கொலம்பசின் உடன்பிறந்தார் பார்த்தலோமியோ லிசுபனில் ஒரு வரைபடங்களை உருவாக்கும் தொழிலில் ஈடுபட்டிருந்தார். அவ்வமயம் இவ்விரு உடன்பிறந்தவர்களும் வரைபடங்கள் வரைபவர் களாகவும், புத்தகங்களைச் சேமிப்பவர்களாகவும் விளங்கினர்.
கொலம்பஸ் வணிகக் கடற்பயணியாக போர்ச்சுகீசிய கப்பல்களில் மாறினார். 1477-ல் ஐசுலாந்துக்கும், 1478-இல் மடியெராவிற்கும் சர்க்கரை வாங்கவும், மேற்கு ஆப்பிரிக்க கடலோரங்களுக்கு 1482லும் 1485-இலும், போர்ச்சுகீசிய வணிக எல்லையான ஸாவோ ஜார்ஜ் டா மைனா என்ற கினியாக்கரைக்கும் சென்றார்.
கொலம்பஸ் பிலிப்பா பெரெசிட்டெல்லோ எ மோனிசு என்ற போர்ச்சுகீசியப் பெண்ணைத் திருமணம் செய்துகொண்டார் (1479ல்). அவர்களுக்கு தியெகோ என்ற ஒரு மகன் பிறந்தான். பிலிப்பா 1485-இல் காலமானார். கொலம்பஸ் பின்னர் பீட்ரிஸ் என்ரிகுவெசு என்ற பெண்ணைத் திருமணம் செய்து (1488-இல்) கொண்டார். அவர்களுக்கு பெர்டினான்ட் என்ற மகன் பிறந்தான்.
கொலம்பஸ் முதலில் தன்னுடைய திட்டத்தை போர்ச்சுக்கல் அரச சபையில் 1485-இல் தெரிவித்தார். ஆனால் அரசரின் நிபுணர்கள் கொலம்பசின் வழி கொலம்பசு நினைப்பதை விடப் பெரியது என நம்பினர். அதனால் அதற்கு அவர்கள் மறுப்பு தெரிவித்தனர். கொலம்பஸ் பின்னர் எசுப்பானியா அரசவையை நாடினார். ஆனால் பல நாட்கள் அலைக்கழிக்கப்பட்ட பின்னர் 1492-இல் அவர்களுடைய ஒப்புதலைப் பெற்றார். எசுப்பானிய அரசரும் அரசியும் (பெர்டினான்ட் ஆப் ஆரகன், காசிட்டைலின் இசபெல்லா) அப்போது தான் கடைசி முசுலிம் கோட்டையான கிரானாடாவைக் கைப்பற்றியிருந்தனர். அவர்கள் பயணத்திற்கான செலவை ஏற்றுக்கொள்வதாகத் தெரிவித்தனர். செலவில் பாதியைத் தனியாரிடமிருந்து பெற்றுக்கொள்வதற்கு ஏற்கெனவே கொலம்பஸ் திட்டம் வகுத்திருந்தார். கொலம்பசு அலைகடலின் தளபதி என்று பட்டம் சூட்டப்பட்டு, புதிதாகக் கண்டுபிடிக்கும் தீவுகளுக்கு அவரே ஆளுநர் என்ற உறுதிமொழியும், வருவாயில் பெரும்பங்கை அவருக்குக் கொடுக்கவும் அரசவை ஒப்புக்கொண்டது.
அவ்வாண்டு ஆகத்து 3 அன்று, கொலம்பஸ் பாலோசில் இருந்து மூன்று கப்பல்களில் சாண்டா மரியா, நின்யா, பின்டா புறப்பட்டார். முதலில் அவர் கேனரித்தீவுகளை அடைந்தார். அங்கே ஒரு மாதம் தங்கினார். பின்னர் பெரும் பயணத்தைத் துவக்கினார். அவர் தன்னுடைய குறிப்பேடுகளில் தான் பயணித்த தூரத்தை விடக்குறைவான தூரத்தையே பதிவு செய்து தன்னுடைய மாலுமிகளை ஏமாற்றினார். இன்றைக்கும் அவர் முதலில் அடைந்த தீவு எது என்பதில் சர்ச்சை இருந்தாலும், அவர் பகாமாஸ்-இல் ஒரு தீவையே அடைந்திருக்க வேண்டும் என்பது உறுதி. அவர் அக்டோபர் 12, 1492-இல் கரையேறினார்.
அவர் அங்கிருந்த அமெரிக்கப் பழங்குடிகளை எதிர்கொண்டார். அவர்கள் டையனோ அல்லது ஆராவாக், மிகவும் அமைதியானவர்களாகவும், நட்புணர்வுடனும் விளங்கினர். அக்டோபர் 14, 1492 குறிப்பில் கொலம்பஸ் எசுப்பானியாவின் அரசர் பெர்டினான்டு, அரசி இசபெல்லா ஆகியோருக்கு டையாகுட்;நோ பற்றி பின்வருமாறு எழுதினார்.
“அரசர் விரும்பினால், அவர்கள் அனைவரையும் காஸ்டைலுக்குக் கொண்டு வரமுடியும்;அல்லது, அவர்களது தீவிலேயே பிணையாளிகளாக ஆக்கமுடியும்.அவர்களில் ஐம்பது பேரை உங்களுடைய பொறுப்பில் விடுகிறேன். நீங்கள் அவர்களை வைத்து என்ன செய்ய வேண்டுமோ செய்யலாம்.” கொலம்பஸ் அவருடைய முதல் பயணத்தில், கியூபாவிலும், லா எசுப்பானியோலா விலும் பயணத்திருந்தார் (அக்டோபர் 28-இல்).சாண்டா மரியா தரை தட்டியதால், அதை அவர் கைவிட வேண்டியதாயிற்று. கொலம்பசு லா நாவிடாட் என்ற குடியேற்றத்தை அங்கே அமைத்து அங்கே தன்னுடன் வந்த 39 பேரை விட்டு விட்டார்.
சனவரி 4, 1493-இல் அவர் நாடு திரும்பப் பயணப்பட்டார்.ஆனால், புயல் காரணமாக அவர் போர்ச்சுகல்லில் இறங்க வேண்டியதாயிற்று. அப்போது போர்ச்சுகல்லுக்கும், காஸ்டைலுக்குமான உறவு மிகவும் மோசமாக இருந்த படியால் அங்கே அவர் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டார். பின்னர் மார்ச் 15-இல் அவர் எசுப்பானியாவை அடைந்தார்.
அங்கே அவர் தான் கொண்டு வந்த தங்கம் மற்றும் கொண்டு வந்த அமெரிக்கப்பழங்குடிகள் ஆகியவற்றை அரசவையில் ஒப்படைத்தார். அங்கே அதுவரை அறியப்படாதிருந்த புகையிலையையும், அன்னாசியையும் அன்னாக்கு ஆகியவைகளைப்பற்றி அங்கே விளக்கினார். அங்கே அவர் ஒரு மாவீரராக வரவேற்கப்பட்டார். அவருடைய கண்டுபிடிப்பு பற்றிய செய்தி உலகெங்கும் பரவியது.
மே 20, 1506-ல் கொலம்பஸ் இறந்தார். அப்போது கூட தான் கண்டுபிடித்தது, ஆசியாவின் கிழக்குக்கரை என்று உறுதியாக நம்பினார். அவருடைய இறப்பின் பின்கூட அவரது பயணம் தொடர்ந்தது.