டாஸ்மாக் தொடர்பாக தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு மீது விசாரணை நடத்திய உச்ச நீதிமன்றம், மதுக்கடைகளை மூடும்படி சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவிற்கு இடைக்கால தடை விதித்தது.

டாஸ்மாக்கை மூடுங்கள்

தமிழகத்தில் ஊரடங்கு காரணமாக மூடப்பட்ட மதுக்கடைகளை திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது. இதனையடுத்து கடந்த 7ஆம் தேதி டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கப்பட்டு 2 நாட்கள் மது விற்பனை நடைபெற்றது. இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், ஊரடங்கு முடியும் வரை தமிழகத்தில் மதுக்கடைகளை மூடும்படி உத்தரவு பிறப்பித்தது.

மேல்முறையீடு

உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கில் தங்களது தரப்பு வாதத்தை கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்கக் கூடாது என மதிமுக, பாமக, மக்கள் நீதி மய்யம், மக்கள் அதிகாரம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பில் கேவியட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. 

உச்ச நீதிமன்றம் விசாரணை

இந்த நிலையில், உச்ச நீதிமன்றத்தில் டாஸ்மாக் தொடர்பான தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு இன்று விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் எல். நாகேஸ்வர ராவ், எஸ்.கே. கவுல், பி.ஆர். கவாய் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த விசாரணையை நடத்தியது. அப்போது, டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளதால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டிருப்பதாகவும், கடைகளை திறக்க அனுமதிக்க வேண்டும் என்றும் தமிழக அரசு தரப்பில் வாதிடப்பட்டது.

இடைக்காலத் தடை

இதையடுத்து மதுக்கடைகளை மூட வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் நீதிபதிகள் இடைக்கால தடை விதித்தனர்.  அதோடு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கு விசாரணைக்கும் இடைக்கால தடை விதித்தனர். இதையடுத்து, தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை திறக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

பல வண்ணங்களில் டோக்கன்

டாஸ்மாக் கடைகளில் மது வாங்க சிவப்பு, மஞ்சள், பச்சை உள்ளிட்ட 7 வண்ணங்களில் டோக்கன் வழங்க டாஸ்மாக் நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வண்ண டோக்கனுக்கு மதுபானம் விற்பனை செய்யப்படும். டோக்கனில் குறிப்பிட்டுள்ள நேரத்தில் மட்டுமே மதுபானம் வாங்க மதுக்கடைக்கு வர முடியும். குறிப்பிட்ட வண்ணம் உள்ள டோக்கனை குறிப்பிட்ட நாளில் கொண்டு வந்து டாஸ்மாக்கில் மது வாங்கலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here