பிரதமருக்கு எதிராக சிலரை ஏவி விட்டு கொச்சையாக பேச வைக்கும் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும் என பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச். ராஜா வலியுறுத்தியுள்ளார்.

திமுக மீது குற்றச்சாட்டு

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், 24 ஆண்டுகளாக மதுவிலக்கு மாநிலமாக இருந்த தமிழகத்தை குடிகார மாநிலமாக மாற்றியது திமுக தான் எனக் குற்றம்சாட்டினார். 2016 தேர்தலில் அதிமுக படிப்படியாக மதுவிலக்கு கொண்டு வருவதாக தெரிவித்திருந்தது என்றும் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கனவை தற்போதைய அரசு நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

சிதம்பரத்திற்கு எதுவும் தெரியாது

பொருளாதாரத்தில் அ, ஆ தெரியாத ப. சிதம்பரத்தின் கருத்துக்கு எல்லாம் தன்னால் பதில் சொல்ல முடியாது என எச். ராஜா கூறினார். 14 நாடுகளில் சொத்து வைத்திருக்கும் சிதம்பரத்துக்கு இந்தியாவை பற்றி எதுவும் தெரியாது என்றும் அவர் சாடினார்.

குற்றச்சாட்டு

ஒரே நாடு, ஒரே ரேஷன் என்பதை எதிர்த்த திமுக போன்ற கட்சிகள் மக்களின் நலனில் அக்கறை இல்லாதவர்கள் எனக் கூறிய எச். ராஜா, மக்கள் எப்போதும் துன்பத்திலேயே இருக்க வேண்டும் என நினைப்பவர்கள்தான் அவர்கள் எனவும் குற்றம்சாட்டினார்.

மன்னிப்பு கேட்க வேண்டும்

திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பிரதமருக்கு எதிராக மோசமான செயல்பாட்டை கையில் எடுத்து வருவதாகவும், இதனை வன்மையாக கண்டிப்பதாகவும் அவர் கூறியுள்ளார். சிலரை ஏவி விட்டு கொச்சையாக பிரதமரை தாக்கி பேச வைக்கும் ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் எச். ராஜா வலியுறுத்தியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here