தென்கிழக்கு வங்கக் கடலில் இன்று மாலை ‘ஆம்பன்’ புயல் உருவாக உள்ளது. இதன்காரணமாக ஒடிசா மாநிலத்தில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
‘ஆம்பன்’ புயல்
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கையில், தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 48 மணி நேரத்திற்கு தெற்கு கடலோர மாவட்டங்களிலும், மேற்கு தொடர்ச்சி மலையோர மாவட்டங்களின் ஒரு சில இடங்களிலும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கூறியுள்ளது. வங்கக்கடலில் இன்று மாலை ‘ஆம்பன்’ புயல் உருவாக வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பலத்த காற்று வீசும்
இந்தப் புயல் மே 17ம் தேதி வரை வடமேற்கு திசையிலும், 18ம் தேதி வடகிழக்கு திசையிலும் நோக்கி நகர்வதால் 18, 19 ஆகிய தேதிகளில் மணிக்கு 75 – 85 கி.மீ வேகத்தில் காற்று வீசும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். சில நேரங்களில் மணிக்கு 95 கிமீ வேகம் வரை காற்று வீசும் என்றும் புவியரசன் கூறியுள்ளார்.
மீனவர்களுக்கு எச்சரிக்கை
எனவே, அந்த சமயங்களில் தெற்கு வங்கக்கடல், குமரிக்கடல், லட்சத்தீவு, மத்திய வங்கக் கடல், அரபிக்கடல் பகுதிகளில் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என புவியரசன் அறிவுறுத்தினார். ‘ஆம்பன்’ புயலால் வடக்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் கனமழை பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கை
இந்த நிலையில், ‘ஆம்பன்’ புயல் காரணமாக ஒடிசா மாநிலத்தின் 12 கடற்கரை மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து 12 மாவட்ட ஆட்சியர்களுக்கு தயாராக இருக்கும்படி அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் ஒடிசா பேரிடர் துரித நடவடிக்கைப் படை, தேசிய பேரிடர் குழு, தீயணைப்பு வீரர்கள் ஆகியோர் தயார் நிலையில் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.