‘அலா வைகுந்தபுரமுலோ’ படத்திலிருந்து வெளியான ‘புட்ட பொம்மா’ பாடலுக்கு நடிகை சிம்ரன் டிக் டாக்கில் நடனமாடிய வீடியோ ரசிகர்களை கவர்ந்துள்ளது.
‘அலா வைகுந்தபுரமுலோ’
அல்லு அர்ஜுன், பூஜா ஹெக்டே நடிப்பில் ஜனவரி மாதம் வெளியான திரைப்படம் ‘அலா வைகுந்தபுரமுலோ’. திரிவிக்ரம் இயக்கியுள்ள இப்படத்தில் தபு, ஜெயராம், நிவேதா பெத்துராஜ், நவ்தீப் உள்ளிட்டோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள அனைத்துப் பாடல்களும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றன.
டிக் டாக்கில் ‘புட்ட பொம்மா’
குறிப்பாக, ‘புட்ட பொம்மா புட்ட பொம்மா’ என்ற பாடல் இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. டிக் டாக்கில் #buttabomma என்ற ஹேஷ்டேக்கைப் பயன்படுத்தி, பொதுமக்கள் முதல் பிரபலங்கள் வரை இப்பாடலுக்கு நடனம் ஆடியுள்ளனர். சமீபத்தில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் அதிரடி வீரர் டேவிட் வார்னர், தனது மனைவியுடன் ‘புட்ட பொம்மா புட்ட பொம்மா’ பாடலுக்கு நடனமாடினார்.
சிம்ரன் நடனம்
அந்த வரிசையில் தற்போது ‘புட்ட பொம்மா’ பாடலுக்கு நடனமாடியுள்ள நடிகை சிம்ரன், அந்த வீடியோவை தனது டுவிட்டர் பக்கத்திலும் பதிவிட்டுள்ளார். மேலும் நடனம்தான் தன்னை இயக்கிக் கொண்டிருப்பாதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அந்த வீடியோவை பார்த்த சிம்ரனின் ரசிகர்கள், ஏற்கனவே வைரலான பாடலை மேலும் வைரலாக்க உங்களால் மட்டும் தான் முடியும் என பதிவிட்டுள்ளனர்.















































