நடிகர் விஜய் சேதுபதி மற்றும் அவரது குடும்பத்தாரைப் பற்றி சமூக வலைதளங்களில் தரக்குறைவாகவும், தரம் தாழ்ந்தும் சிலர் பதிவிடுவதாகவும், இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கக் கோரியும் போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

சர்ச்சை பேச்சு?

தமிழில் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக திகழ்பவர் நடிகர் விஜய்சேதுபதி. தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாள திரையுலகிலும் ஜொலித்து வருகிறார். இந்த நிலையில், பல மாதங்களுக்கு முன் நடந்த தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற நடிகர் விஜய்சேதுபதி, கோவில்களில் கடவுள்களுக்கு நடைபெறும் அபிஷேகம் மற்றும் அலங்கார முறைகள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக கூறப்படுகிறது.

இந்து அமைப்புகள் கண்டனம்

இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலானதையடுத்து, விஜய்சேதுபதியின் பேச்சுக்கு இந்து அமைப்புகள் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். மேலும், இந்துக்கள் மனதை புண்படுத்தும் வகையில் பேசியதாக நடிகர் விஜய்சேதிபதி மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி அகில இந்திய இந்து மகா சபா சார்பில் திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகாரும் அளிக்கப்பட்டுள்ளது.

போலீசில் புகார்

இந்நிலையில், விஜய்சேதுபதி தரப்பிலும் சென்னை சைபர் கிரைம் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அந்த புகார் மனுவில், நடிகர் விஜய் சேதுபதி அவர்கள் ஒரு ஆண்டுக்கு முன் நடைபெற்ற டிவி நிகழ்ச்சியில் மறைந்த கதாசிரியரும், நகைச்சுவை நடிகருமான திரு. கிரேசி மோகன் அவர்கள் ஒரு மேடையில் சொன்ன நகைச்சுவை துணுக்கை இந்த நிகழ்ச்சியில் மறுபதிவு செய்தார்.

தரம் தாழ்ந்து பேசுவதா

இப்படி எதார்த்தமாக சொன்ன நகைச்சுவை துணுக்கு ஒன்றை சொன்ன பொருள் தன்மையில் இருந்து மாற்றி, இந்துக்களுக்கு எதிராக விஜய் சேதுபதி சொன்ன கருத்தாக திரித்து அந்த காணொளியை எடிட் செய்து குறிப்பிட்ட சிலர் வதந்திகளை பரப்பி வருகின்றனர். இந்த வதந்தியை தொடர்ந்து விஜய் சேதுபதியை எதிர்த்தும், ஆதரித்தும் வலைதளத்தில் ஒரு பெரும் சர்ச்சையே நிகழ்கிறது. இந்த சர்ச்சையில் தர்மத்தை பாதுகாக்கும் காவலர்களை போல் வாதிடுபவர்கள், தார்மீக தர்ம முறைகளை மீறி, விஜய் சேதுபதி மற்றும் அவரது குடும்பத்தாரைப் பற்றி தரக்குறைவாகவும், தரம் தாழ்ந்தும் பதிவிடுகிறார்கள்.

தனி மனித மரியாதை

இது விஜய் சேதுபதி அவர்களின் நற்பெயரை குலைப்பதோடு, தேவை இல்லாத வலைதள வாக்குவாதங்கள், சமுதாய நல்லிணக்கத்தையும் அமைதியையும் சீர்குலைக்கும் ஒரு தூண்டு கோலாக உருவாகிவிடுமோ என்ற அச்சம் ஏற்படுத்துகிறது. அறிவுசார் சமூகத்தில் வாழும் நாம், தனி மனித கருத்துக்கள் வேறுபட்டிருந்தாலும், ஏற்புடையதாக இல்லாமல் இருந்தாலும், தனி மனித மரியாதையை பாதிக்கும் விதமாக இருக்கக் கூடாது.

தரக்குறைவான பதிவு

கருத்துச் சுதந்திரம் என்பது காழ்ப்புணர்ச்சியாகவும், காயப்படுத்தும் விதமாகவும் இருக்கக்கூடாது. அதனால், உடனடியாக விஜய் சேதுபதி மற்றும் அவரது குடும்பத்தினரைப் பற்றிய தரக்குறைவான, அருவருக்கத்தக்க உள்ள பதிவுகளை அகற்றவும், இத்தகைய பதிவுகள் வராமல் தடுக்கவும், நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இப்படிப்பட்ட அவதூறுகளுக்கு அடிப்படைக் காரணமாக அமைந்த சர்ச்சைக்குரிய அந்த காணொளியும் நீக்கப்பட வேண்டும் என கேட்டுக் கொள்வதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here