கொரோனா ஊரடங்கு காலத்தில் மதுக்கடைகளில் மது விற்பனை செய்வதற்குப் பதிலாக, வீட்டிலேயே டோர் டெலிவரி செய்வது குறித்து மாநில அரசுகள் பரிசீலிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கொரோனா அச்சம்
சிவப்பு, ஆரஞ்சு, பச்சை என கொரோனா பாதிப்பு பகுதிகள் மூன்று மண்டலங்களாக பிரிக்கப்பட்ட பின், கடந்த 5-ம் தேதி முதல் பல்வேறு மாநிலங்களில் மதுக்கடைகள் திறக்கப்பட்டு மது விற்பனை நடந்து வருகிறது. தமிழகத்தில் 7-ந் தேதி முதல் மது விற்பனை நடைபெறுகிறது. ஆனால் மது வாங்க வரும் மக்கள், சமூக விலகலைக் கடைப்பிடிக்காமல் வரிசையில் நிற்பதால் கொரோனா பரவும் அச்சம் ஏற்படுகிறது.
பொதுநல மனு
இதைச் சுட்டிக்காட்டி, ஊரடங்கு காலத்தில் மது விற்பனை செய்யப்படுவது சாமானிய மக்களின் வாழ்க்கையைப் பாதிப்பதால், அதற்கு தடை விதிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. காணொலி காட்சி மூலம் இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் அசோக் பூஷான், சஞ்சய் கிஷன் கவுல் , பி.ஆர். காவே ஆகியோர் அடங்கிய அமர்வு, உத்தரவு ஏதும் பிறப்பிக்க மறுத்துவிட்டது. ஆனால், சில ஆலோசனைகளை வழங்கியுள்ளது.
டோர் டெலிவரி
நீதிபதிகள் வழங்கிய ஆலோசனையில், இந்த வழக்கில் நாங்கள் உத்தரவு ஏதும் பிறப்பிக்க முடியாது. ஆனால் மதுவகைகளை மக்களுக்கு மறைமுக விற்பனை மூலம் வழங்கலாம். அதாவது, மதுவகைகளை தேவைப்படுவோரின் வீட்டுக்கே டோர் டெலிவரி செய்யலாம். இதை மாநில அரசுகள் பரிசீலிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளது.