பச்சையாக மாறியுள்ள பகுதிகளில் மதுபான கடைகளை திறக்கலாம் என மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதையடுத்து, பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளில் இன்று மதுக்கடைகள் திறக்கப்பட்டன. நீண்ட வரிசையில் காத்திருந்த மதுப்பிரியர்கள் தங்களுக்கு விருப்பமான மதுவகைகளை ஆர்வமுடன் வாங்கிச் சென்றனர்.
மதுக்கடைகள் திறப்பு
இந்தியாவில் மே 17 ந்தேதி வரை 3-வது கட்ட ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது. சில நிபந்தனைகளுடன் மதுபானக் கடைகளை திறக்க மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. அதனடிப்படையில் நாட்டின் பல பகுதிகளில் மதுக்கடைகள் திறக்கப்பட்டுள்ளன.
சமூக இடைவெளி?
டெல்லியின் பல இடங்களில் மதுபானக் கடைகள் திறக்கப்பட்டதால், மதுப்பிரியர்ககள் தங்களுக்கு தேவையான மதுவினை வாங்கிச் சென்றனர். மாளவியா நகர் உட்பட சில இடங்களில் உள்ள மதுபானக் கடைகளில் சமூக இடைவெளி என்பதையே மக்கள் மறந்துவிட்டனர்.
வட்டத்தில் குடிமகன்
இதேபோல், சத்தீஸ்கார் மாநிலத்தில் கட்டுப்பாட்டு பகுதிகளை தவிர்த்து பிற பகுதிகளில் மதுக்கடைகளை திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. மது வாங்க வருபவர்கள் முறையாக சமூக இடைவெளியை பின்பற்றுவதற்கு வட்டங்களும் வரையப்பட்டிருந்தன.
நீண்ட வரிசை
இளசுகளின் இன்ப நகரமான பெங்களூரில் இன்று அனைத்து ஒயின் ஷாப்புகளிலும் நீண்ட வரிசையில் நின்று தங்களுக்கு விருப்பமான மதுவகைகளை மது பிரியர்கள் ஆர்வமுடன் வாங்கிச் சென்றனர். சில கடைகளில், பெண்களுக்கென ஏற்படுத்தப்பட்ட பிரத்யேக வரிசையில், அவர்கள் பொறுமையுடன் காத்திருந்து தங்களுக்கு வேண்டிய மதுவினை வாங்கிச் சென்றனர்.