தமிழ்நாடு மின்சார வாரியத்தை குறை சொல்வதோ குற்றம்‌ சாட்டுவதோ தனது‌ நோக்கமல்ல என நடிகர் பிரசன்னா தெரிவித்துள்ளார்.

பிரசன்னா கேள்வி

பிரபல சினிமா நடிகரான பிரசன்னா பல படங்களில் பிஸியாக நடித்துவரும் நடிகர்களுள் ஒருவர். சமீபத்தில் இவர் வில்லனாக நடித்த ‘மாஃபியா’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுத்தந்தது. அவர் இரு தினங்களுக்கு முன்பு தமிழ்நாடு மின்சார வாரியம் பற்றி ஒரு டுவிட் பதிவிட்டு இருந்தார். “தமிழ்நாடு மின்சார வாரியம் TNEB கொரோனா லாக்டவுனில் கொள்ளை அடிக்கிறது என எத்தனை பேர் நினைக்கிறீர்கள்?” என கேள்வி எழுப்பியிருந்தார்.

அதிக மின் கட்டணம்

மேலும், தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டி அளித்த அவர், மின் கட்டணம் தனக்கு 70 ஆயிரம் ரூபாய்க்கும் மேல் வந்திருப்பதாகவும், அதை தன்னால் செலுத்தி விட முடியும். ஆனால், சாதாரண மக்கள் எப்படி கட்டுவார்கள்? என்றும் கேள்வி எழுப்பியிருந்தார். சமூக வலைத்தளத்தில் பலரும் அது உண்மைதான் மின் கட்டணம் அதிகரித்துள்ளது என பதிவிட ஆரம்பித்தனர்.

கண்டன அறிக்கை

இந்த விவகாரம் பரபரப்பாக பேசப்பட்ட நிலையில், தமிழ்நாடு மின்சார வாரியம் பிரசன்னா வீட்டு மின் கட்டணம் பற்றிய அறிக்கை ஒன்றினை வெளியிட்டது. அதில், பிரசன்னா வீட்டிலுள்ள மின் இணைப்பு கட்டணம் பற்றி தெளிவான விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. நடிகர் பிரசன்னா ஊரடங்கு காலகட்டம் நிறைவடைந்த பின்பு மின் கணக்கெடுப்பு என்ற முறையில் கொள்ளை அடிப்பதாகத் தவறான செய்தியை வெளியிட்டுள்ளார். இந்த கணக்கெடுப்பு முறையானது தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் விதிகளின்படி நடைமுறைப்படுத்தப்படுவதால் நடிகர் பிரசன்னா தமிழ்நாடு மின்சார வாரியத்தை கடும் சொற்களால் குற்றம்சாட்டுவது கண்டிக்கத்தக்கதாகும்.

தவறான செய்தி

பிரசன்னா வீட்டில் இரண்டு மின் இணைப்புகள் உள்ளன. இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை, வழக்கமான நடைமுறை கணக்கெடுப்பு முறையில்தான் கணக்கீடு செய்யப்பட்டு வருகிறது. ஆகவே மின்சார வாரியத்தால் மின் கட்டணம் கணக்கீடு செய்யப்படும் பொழுது, நான்கு மாத மின் நுகர்வு இரு இரண்டு மாத மின் நுகர்வாகப் பிரிக்கப்பட்டு அதற்கான வீதப்பட்டியலில் முந்தைய மாத கட்டணம் கழிக்கப்பட்டபின் மின் கட்டண தொகை கணக்கிடப்படுகிறது. இதனைக் கருத்தில் கொள்ளாமல், முந்தைய மாத யூனிட்டை கழிக்காமல் தொகை மட்டுமே கழிக்கப்படுகிறது என்ற செய்தி தவறானதாகும். பொதுமக்கள் தங்களது கணக்கீட்டு முறையில் சந்தேகங்கள் இருந்தால் சம்பந்தப்பட்ட பிரிவு அலுவலகத்தை அணுகி தங்களது சந்தேகங்களைத் தீர்த்துக் கொள்ளலாம்.

முறையான கணக்கீடு

பிரசன்னா வீட்டில் நான்கு மாதத்தில் 6920 யூனிட் மின்சாரம் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதை இரண்டாக பிரித்து முதல் இரண்டு மாதங்களுக்கான 3460 யூனிட்டுக்கு 21,316 ரூபாயும், அடுத்த 3460 யூனிட்டுக்கு மற்றொரு 21,316 ரூபாயும் என மொத்தமாக 42,632 ருபாய் மின் கட்டணமாக விதிக்கப்பட்டு உள்ளது. ரீடிங் எடுக்காமல் அதற்கு முந்தைய மாத தொகையையே முன்பு நிர்ணயிக்கப்பட்ட 13,528 ரூபாயை தற்போது வரை பிரசன்னா செலுத்தவில்லை. அதனால் மொத்த கட்டணம் ரூ.42,632 தற்போது மின் கட்டணமாக விதிக்கப்பட்டு உள்ளது என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

பிரசன்னா வருத்தம்

இந்நிலையில், மின்சார வாரியத்தை குறை கூற வேண்டும் என்கிற எண்ணத்தில் அப்படி பேசவில்லை என நடிகர் வருத்தம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “உண்மைதான்‌! ரீடிங்‌ எடுப்பதிலிருந்து 10 நாட்களுக்குள்‌ பொதுவாக கட்டணம்‌ செலுத்தும்‌ பழக்கமுள்ள நான்‌, மார்ச்‌ மாதம்‌ ரீடிங்‌ எடுக்காததால்‌ கட்டணம்‌ செலுத்த தவறியது உண்மைதான்‌. அதே அளவு இதற்கு முன்‌ காலதாமதமின்றி தவறாமல்‌ கட்டணம்‌ செலுத்தி வருகிறேன்‌ என்பதும்‌ உண்மை. வாரியம்‌ சொல்வதுபோல்‌
நான்கு மாத கணக்கீட்டாலும்‌ மார்ச்‌ மாத கட்டணம்‌ சேர்த்தும்‌ எனக்கு தனிப்பட்ட கட்டணம்‌ கூடுதலாக வந்திருக்கலாம்‌. என்‌ தனிப்பட்ட பிரச்னையாக இதை நான்‌ எழுப்பவில்லை.

குறை சொல்வது நோக்கமல்ல

அதிக தொகை கட்டணமாக வந்திருப்பதாக எவ்வளவு பேர்‌ நினைக்கிறார்கள் என்று அறிந்துகொள்ளவே என்‌ ட்வீட்‌. மின் வாரியத்தை குறை சொல்வதோ குற்றம்‌ சாட்டுவதோ என்‌ நோக்கமல்ல. பொதுவாக எல்லோருக்கும்‌ வந்திருப்பதாக சொல்லப்படும்‌ அதிக கட்டணம்‌ குறித்த கவன ஈர்ப்பும்‌, அதன்மூலம்‌ வாரியமோ, அரசோ இந்த இக்கட்டான சூழலில்‌ ஏதாவது முறையில்‌ இப்பிரச்னையில்‌ மக்களுக்கு ஒரு தளர்வோ கட்டணம்‌ செலுத்த தவணை அல்லது கால அவகாசமோ தருமாயின்‌ மிக்க உதவியாக இருக்கும்‌ என்பதே என்‌ வேண்டுகோள்‌.

உள்நோக்கமல்ல

நேற்றைய தொலைக்காட்சி உரையாடலிலும்‌ அதையே நான்‌ குறிப்பிட்டிருக்கிறேன்‌. ஊரடங்கு காலங்களில்‌ மருத்துவ, காவல்‌, சுகாதார துறைகள்‌ போலவே மின்வாரிய ஊழியர்களும்‌, அதிகாரிகளும்‌ அயராது பணியாற்றியிருக்கிறார்கள்‌ என்பதை நன்றியோடு பாராட்டவும்‌ நான்‌ மறக்கவில்லை. மற்றபடி வாரியத்தையோ, அரசையோ குறை கூறுவதற்கான உள்நோக்கமில்லை. உள்நோக்கமில்லாத போதும்‌ என்‌ வார்த்தை மின்வாரிய ஊழியர்கள்‌, அதிகாரிகள்‌ மனம்நோகச்‌ செய்திருப்பின்‌ அதற்காக வருந்துகிறேன். மக்கள்‌ மீது விழுந்திருக்கும்‌ இந்த எதிர்பாரா சுமையை வாரியமும்‌ அரசும்‌ இறக்கிவைக்குமென எதிர்பார்க்கிறேன். என்‌ வீட்டிற்கு நிர்ணயிக்கப்பட்ட முழு தொகையும்‌ எந்த நிலுவையுமின்றி இன்று காலை நான்‌ செலுத்திவிட்டேன்‌.” இவ்வாறு தனது டுவிட்டர் அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here