அமெரிக்காவில் கருப்பினத்தவர் கொல்லப்படுவது மனிதகுலத்திற்கு எதிரான பாவம் என்றும் அவர்களுக்கு ஆதரவாக ஒரு நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் எனவும் நடிகை எமி ஜாக்சன் தெரிவித்துள்ளார்.
எமி ஜாக்சன்
தமிழில் ‘மதராசப்பட்டினம்’ திரைப்படம் மூலம் அறிமுகமானவர் எமி ஜாக்சன். அதனை தொடர்ந்து இயக்குநர் ஷங்கரின் ‘ஐ’, ‘2.0’ உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். லண்டனைச் சேர்ந்த எமி ஜாக்சனுக்கு ‘2.0’ படத்திற்கு பின் தமிழில் எந்த படமும் ஒப்பந்தமாகவில்லை.
குழந்தை
ஜார்ஜ் பெனாய்டோ என்ற தொழிலதிபருடன் நிச்சயம் செய்து குழந்தை பெற்றுக் கொண்டார். சமீப காலமாக குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுவரும் எமி ஜாக்சனுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கிறது.
போராட்டம்
அமெரிக்காவில் சில தினங்களுக்கு முன்பு கருப்பின இளைஞர் போலீசாரால் கொல்லப்பட்ட சம்பவத்தினால் அங்கு மக்கள் போராட்டம் வெடித்துள்ளது. வெள்ளை மாளிகைக்கு முன்பு கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு மக்கள் போராட்டம் நடத்தியதால், அதிபர் டிரம்ப் மாளிகைக்குள் பதுங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அவர் அங்கிருந்த வண்ணம் தேசிய பாதுகாப்பு படை வீரர்களுக்கு கட்டளைகளை பிறப்பித்து வருகிறார்.
மனிதகுலத்திற்கு எதிரான பாவம்
இந்நிலையில், அமெரிக்காவில் நடக்கும் பிரச்சனை குறித்து தனது இன்ஸ்டாகிராமில் கருத்தினை பதிவிட்டுள்ளார் நடிகை எமி ஜாக்சன். அதில் “இதயம் கனக்கிறது. அமெரிக்காவில் நடக்கும் கொடூரத்தை பற்றிய செய்திகளைப் பார்த்தேன். இது மனிதகுலத்திற்கு எதிரான பாவம். கருப்பின மக்களுக்கு எதிராக நடக்கும் போலீசின் மிருகத்தனத்தால் மக்கள் பாதிக்கப்படுகின்றனர். நாம் அனைவரும் கருப்பின மக்களுக்கு ஆதரவாக ஒரு நிலைப்பாட்டை எடுக்க வேண்டும். சமூகவலைதளங்களில் பதிவு செய்வதைவிட உரையாடலை மேற்கொள்வோம். நாம் அனைவரும் ஒன்றுபட்டு அவர்களுக்கு ஆதரவளிக்க வேண்டும்“ என அவர் குறிப்பிட்டுள்ளார்.