37 ஆண்டுகளுக்கு பின் ரீமேக் செய்யப்பட உள்ள பாக்யராஜின் முந்தானை முடிச்சு திரைப்படத்தில் பிரபல ஹீரோ நடிக்க உள்ளார்.
வெற்றித் திரைப்படம்
இயக்குனரும், நடிகருமான பாக்யராஜ் இயக்கத்தில், பாக்யராஜ் மற்றும் ஊர்வசி நடித்து வெளிவந்த ‘முந்தானை முடிச்சு’ திரைப்படம் தமிழகத்தின் பட்டிதொட்டியெங்கும் மாபெரும் வெற்றி பெற்ற ஒரு படம் ஆகும். 1983இல் வெளிவந்த இந்தப் படம் இயக்குனர் பாக்யராஜின் படைப்புக்கு இன்னொரு மைல் கல் என்று சொல்லலாம்.
ரீமேக் செய்ய திட்டம்
37 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த படத்தை நடிகர் சசிகுமார் மற்றும் பாக்யராஜ் இருவரும் இணைந்து ரீமேக் செய்ய திட்டமிட்டுள்ளனர். இப்போதிருக்கும் காலகட்டத்திற்கு ஏற்றவாறு இந்த படத்தை ரீமேக் செய்ய முடிவெடுத்து இருக்கும் பாக்யராஜ், இதற்காக நடிகர் சசிகுமாருடன் கைகோர்த்துள்ளார்.
இன்ப அதிர்ச்சி
ஜே.எஸ்.பி. ஸ்டுடியோஸ் நிறுவனம் மூலமாக ஜே.எஸ்.பி சதீஷ் இந்த ‘முந்தானை முடிச்சு’ ரீமேக் படத்தை தயாரிக்கிறார். பாக்யராஜ் மற்றும் சசிகுமார் இந்தப் படம் தொடர்பான பேச்சுவார்த்தையில் இருப்பது போன்ற ஒரு புகைப்படம் தற்போது வெளிவந்துள்ளது. ‘முந்தானை முடிச்சு’ படம் ரீமேக் செய்யப்படும் தகவல் அனைவருக்கும் ஒரு இன்ப அதிர்ச்சியாகவே உள்ளது.
நடிப்பு, திரைக்கதை, இசை
கைக்குழந்தையுடன் ஆசிரியர் பணி செய்வதற்காக ஒரு கிராமத்திற்கு வரும் கதாநாயகனை அந்த ஊரில் வாழும் துடுக்குத்தனம் கொண்ட ஒரு இளம்பெண் காதலிப்பதை மையமாக வைத்து முந்தானை முடிச்சு படம் அமைந்திருந்தது. இந்தக் கதைக்களம், பாக்கியராஜ் மற்றும் ஊர்வசியின் நடிப்பு, அந்த படத்தின் திரைக்கதை மற்றும் இளையராஜாவின் அற்புதமான இசை என அனைத்தும் ஒன்று சேர்ந்து ‘முந்தானை முடிச்சு’ படத்தை பிளாக்பஸ்டர் படமாக மாற்றியது.
ரசிகர்கள் எதிர்பார்ப்பு
இப்போது அதே படத்தை நடிகர் சசிகுமாரை வைத்து இயக்குனர் பாக்யராஜ் இயக்கும் பட்சத்தில், அந்த படம் நிச்சயமாக வெற்றி அடையும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். சசிகுமார் நீங்களாக இந்தப் படத்தில் மற்ற கதாபாத்திரங்களில் நடிக்கப் போவது யார் என்பது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் இன்னமும் வெளிவரவில்லை.
அமிதாப் பச்சனுக்கு விருப்பம்
நடிகர் பாக்யராஜிக்கு தன்னுடைய வெற்றிப்படமான ‘முந்தானை முடிச்சு’ படத்தை ரீமேக் செய்யும் ஆசை முன்பே இருந்து வந்தது. சில வருடங்களுக்கு முன்னாள் ஒரு திரைப்பட விழாவில் நடிகர் பாக்யராஜ் பேசும்போது ‘முந்தானை முடிச்சு’ படத்தின் இந்தி ரீமேக்கில் அமிதாப் பச்சன் நடிக்க விரும்பியதாக தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனந்த அனுபவம்
வேறு மொழிப் படங்களை தமிழில் ரீமேக் செய்வது ஒரு அனுபவம் என்றால், வெற்றி பெற்ற தமிழ் படத்தையே தற்போதைய காலச் சூழலுக்கு ஏற்ப அதே இயக்குனர் ரீமேக் செய்யும் போது கிடைக்கும் அனுபவம் ரசிகர்களுக்கு ஒரு ஆனந்த அனுபவமாக அமையும்.