ஃபெஞ்சல் புயல் உருவாகியுள்ள நிலையில் தமிழகத்தில் நாளை சென்னை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் அதி கனமழைக்கு வாய்ப்புள்ளதாகக் கூறி ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
காற்றழுத்த தாழ்வு மண்டலம்
இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது; “நேற்று (நவ.,28) தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், வடக்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று (நவ.,29) காலை 08.30 மணி அளவில் அதே பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக, நாகப்பட்டினத்திலிருந்து சுமார் கிழக்கே 300 கிலோ மீட்டர் தொலைவிலும், புதுச்சேரியிலிருந்து கிழக்கு-தென்கிழக்கே 340 கிலோ மீட்டர் தொலைவிலும், சென்னையிலிருந்து தென்கிழக்கே 380 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளது. இது வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 6 மணி நேரத்தில் புயலாக வலுப்பெறக்கூடும். அதன்பிறகு மேலும், வடமேற்கு திசையில் நகர்ந்து வடதமிழக – புதுச்சேரி கடற்கரையை, காரைக்காலிற்கும் – மகாபலிபுரத்திற்கும் இடையே, புதுச்சேரிக்கு அருகே 30ஆம் தேதி மதியம் புயலாக கடக்கக்கூடும். அச்சமயத்தில் காற்றின் வேகம் மணிக்கு 70 முதல் 80 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 90 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
அதி கனமழை
நாளை (நவ.,30) தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்கள் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கன மழையும், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, வேலூர், பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், திருச்சி, புதுக்கோட்டை மற்றும் கரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
ரெட் அலர்ட்
சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 25° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 22° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்” என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனிடையே சில மணி நேரங்களுக்கு முன்பு வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக தீவிரமடைந்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இதற்கு ஃபெஞ்சல் எனப் பெயரிடப்பட்டுள்ளது. இதனால் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய 7 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.