சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று தனது 73வது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு பிரபலங்கள் முதல் தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

ரசிகர் சாம்ராஜ்யம்

பஸ் கண்டக்டராக தன் வாழ்க்கையை தொடங்கி தற்போது இந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டாராக உயர்ந்துள்ளவர் நடிகர் ரஜினிகாந்த். இயக்குநர் பாலச்சந்தர் இயக்கிய அபூர்வ ராகங்கள் படத்தில் கமல்ஹாசன் மற்றும் ஸ்ரீவித்யா ஆகியோருடன் இணைந்து நடித்து தமிழ் திரையுலகில் அறிமுகமானார் ரஜினிகாந்த். தமிழ் மட்டுமின்றி மலையாளம், கன்னடம், இந்தி, தெலுங்கு, வங்காளம் ஆகிய 6 மொழிகளில் 169 படங்களில் நடித்து உலகம் முழுவதும் தனக்கென்று தனி ரசிகர் சாம்ராஜ்யத்தையே கட்டமைத்துள்ளார்.

கொண்டாட்டம்

இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்த் தனது 73வது பிறந்தநாளை இன்று கொண்டாடி வருகிறார். அவருக்கு திரைப் பிரபலங்கள் முதல் அரசியல் கட்சித் தலைவர்கள் வரை வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் ரசிகர்கள் பலரும் ரஜினிகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு சமூகவலைதளங்களில் #Thalaivar 170, #SuperStar Rajinikanth, #HBD SuperStar Rajinikanth போன்ற ஹாஷ்டேக்களை டிரெண்டிங் செய்து அலப்பறை கிளப்பி வருகின்றனர். இதுமட்டுமின்றி கேக் வெட்டியும், இனிப்புகளை வழங்கியும், ரஜினிகாந்தின் உருவப்படத்திற்கு பாலாபிஷேகம் செய்தும் பிறந்தநாளை கொண்டாடி மகிழ்கின்றனர்.

அன்பிற்கினிய நண்பர்

தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நடிகர் ரஜினிகாந்திற்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தவிர, சமூக வலைதளலத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “அன்பிற்கினிய நண்பர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்,” என்று குறிப்பிட்டுள்ளார்.

வாழ்த்து மழை

இதேபோல், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமாகா தலைவர் ஜி.கே. வாசன், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்களும், நடிகர் – நடிகைகள், தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், இசையமைப்பாளர்கள் உள்ளிட்ட திரையுலக பிரபலங்களும் ரஜினிகாந்திற்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here